Published : 10 Mar 2020 09:36 AM
Last Updated : 10 Mar 2020 09:36 AM

க.அன்பழகன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்: பகுத்தறிவு கொள்கையை இறுதிவரை கடைபிடித்தவர் பேரவைத் தலைவர் பி.தனபால் புகழாரம்

சென்னை

மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை நேற்றுமீண்டும் கூடியது. முதல்நாளானநேற்று முன்னாள் அமைச்சர்க.அன்பழகன், எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை தன் இறுதிமூச்சுவரை சிறிதும் பிறழாமல் கடைபிடித்தவர் என க.அன்பழகனுக்கான இரங்கல் தீர்மானத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால் புகழாரம் சூட்டினார்.

தமிழகஅரசின் 2020-21-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை நேற்று கூடியது.அப்போது மறைந்த முன்னாள்உறுப்பினர்கள் க.அன்பழகன், ப.சந்திரன், நடப்பு சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களான மறைந்த கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில், கடந்த 1977-80-ம் ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ப.சந்திரன் பிப்.29-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பேரவைத்தலைவர் பி.தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

தொடர்ந்து, கடந்த பிப்.27-ம் தேதி மறைந்த திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் கடந்த 2006-11-ல்மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவருமான கே.பி.பி.சாமிமற்றும் பிப்.28-ம் தேதி மறைந்த குடியாத்தம் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானத்தை பேரவைத்தலைவர் தனபால் வாசித்தார்.

அதன்பின், முன்னாள் அமைச்சர், அவை முன்னவராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதில் பேரவைத் தலைவர் தனபால் பேசியதாவது:

திராவிட இயக்க கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரும் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மு.கருணாநிதி ஆகியோருடன் அரசியலில் பயணித்த க.அன்பழகன், பகுத்தறிவுக் கொள்கைகளை தன் இறுதி மூச்சுவரை சிறிதும் பிறழாமல் கடைப்பிடித்தவர். சமூக நீதிக்காகவும் மொழி உரிமைக்காகவும் பல்வேறுபோராட்டங்களில் பங்கேற்றவர்.

கடந்த 1957-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை 9 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 1962-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சட்ட மேலவைஉறு்பினராகவும் 1967 முதல் 71-ம் ஆண்டு வரை திருச்செங்கோட்டில் இருந்து மக்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். சட்டப்பேரவையில் அவை முன்னவராகவும் மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என துறைகளின் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளராக தொடர்ந்து பணியாற்றிய க.அன்பழகன், கடந்த 7-ம் தேதி மறைவுற்ற செய்தி அறிந்து பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது. பேரவையின் மாண்பும், சிறப்பும் உயர்வும் எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உறுதி கொண்டவர். அவையில் விவாதம் திசைமாறி செல்கையில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களேயானாலும் அதை ஒருநாளும் அவர் அனுமதித்ததில்லை. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து மறைந்த க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், 2 நிமிடங்கள்மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதையடுத்து, பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாகவும் மீண்டும் பேரவை புதன்கிழமை கூடும்என்றும் தனபால் அறிவித்தார். பேரவையின் முதல் நாள் கூட்டம் 6 நிமிடங்களில் முடிவுற்றது.

கோவிட்-19 முன்னெச்சரிக்கை

தமிழகத்தில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. நேற்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய நிலையில், பேரவை கட்டிட 4-ம் எண் நுழைவுவாயில், 6-ம் எண் நுழைவு வாயில்களில் சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனை பணியாளர்கள், கோவிட்-19 பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அத்துடன், கைகழுவும் திரவமும் வழங்கப்பட்டது. இதன்மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகே உள்ளே செல்லும்படி மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x