Published : 23 Aug 2015 03:35 PM
Last Updated : 23 Aug 2015 03:35 PM

அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகளை அரசு விற்பதா?- ஸ்டாலின் சாடல்

அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் 400மில்லி லிட்டர்தான் பால் இருப்பது வருத்தமளிக்கும் செய்தி என்று மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முகநூலில் எழுதியதாவது:

அளவு குறைந்த பால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விநியோகிக்கப்படுகிறது என்று வெளிவந்துள்ள செய்தி வருத்தமளிப்பதாக இருக்கிறது. அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் 500 மில்லி லிட்டர் பால் அளவு இருப்பதற்குப் பதில் 400 மில்லி லிட்டர் தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆவின் பால் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே ஆவின் பால் தேவைப்படும் மக்களுக்குப் போதிய அளவில் ஆவின் பால் அட்டைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் இருக்கிறது. இந்நிலையில், பாலின் அளவையும் குறைவாகக் கொடுப்பது அவர்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிர்வாகம் செயல்படும் விதம் வினோதமாக இருக்கிறது. முதலில் ஆவின் பாலில் கலப்படம் செய்தார்கள். பிறகு பால் தயாரிப்பாளர்களிடமிருந்து முழு பாலையும் கொள்முதல் செய்ய மறுத்தார்கள்.

இப்போது பாக்கெட் அளவை விட குறைந்த அளவு பால் நிரப்பி ஆவின் பால் விற்பனை செய்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் இதே ஆவின் நிர்வாகம்தான் பாலின் விலையை லிட்டருக்கு 16 ரூபாய்க்கு மேல் செங்குத்தாக உயர்த்தி வாடிக்கையாளர்களை வதைத்தது என்பதும் இங்கே நினைவுகூறத்தக்கது.

இது மட்டுமின்றி, ஆவின் பால் பாக்கெட்டுகள் தரமற்ற பிளாஸ்டிக் மூலம் தயார் செய்யப்படுகிறது என்ற புகாரும் வந்திருக்கிறது. இப்படி குறைவான பால், அதிக விலை என்றெல்லாம் ஒரு ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கி, ஆவின் பால் வாங்கும் மக்களை தனியார் பால் வாங்கும் நிலைமைக்கு அரசே தள்ளுவது மட்டுமின்றி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வழி வகுக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆகவே அளவு குறைந்த பால் கொடுக்கப்படுகிறது என்ற புகாரை விசாரித்து வாடிக்கையாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். ஆவின் பால் அடைக்க கொள்முதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் தரமுடன் இருக்கிறதா என்பதை அறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆவின் பால் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அது மட்டுமின்றி கைக் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவருக்குமே ஆவின் பால் மிகவும் பாதுகாப்பானது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல், தரமான அதே நேரத்தில் சரியான அளவில் ஆவின் பால் கிடைப்பதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x