Published : 10 Mar 2020 09:33 AM
Last Updated : 10 Mar 2020 09:33 AM

ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்த கண்ணகிக்கு ‘அவ்வையார்’ விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்க ஊக்குவித்தல், ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்குகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு, 2020-ம் ஆண்டுக்கான ‘அவ்வையார்’ விருதை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். உடன் சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர்.

சென்னை

ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்தது, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றியது ஆகிய பணிகளுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு இந்தஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இத்துறைகளில் சிறப்பாக பணியாற் றும் பெண்களில் ஒருவரைதேர்வு செய்து சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அவ்வையார் விருது வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். அத்துடன், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா.கண்ணகி, கடந்த 1992-ம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றுவதற்கு பெரும் பங்காற்றியதுடன், மகளிர்சுய உதவிக்குழுக்களை அமைப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சியில் சுய உதவிக்குழுக்களை ஊக்கப்படுத்துபவராக பணியாற்றி 528 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வருவதுடன், ‘விழுதுகள்’ என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பையும் நடத்தி வருகிறார்.

தகன மேடைகளில் சடலங்களை எரிக்கும் பணியை பெண்களும் மேற்கொள்ள இயலும்என்பதை நிரூபிக்கும் வகையில் திருவண்ணாமலை நகராட்சியில் எரிவாயு தகனமேடை பொறுப்பாளராக கண்ணகி பணியாற்றிவருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு சட்டவிதிகள்படி, இறுதிச்சடங்கு மேற்கொண்டுள்ளார். கடந்த2016-ல் மகளிர் தின விருது, 2018-ல்குடியரசு தின விருது, மண்கழிவு மேலாண்மைக்கு 2018-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.சரோஜா, சேவூர் எஸ்.ராமச் சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், சமூக நலத்துறை செயலர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விருது பெற்ற கண்ணகி கூறும்போது, ‘‘திருவண்ணாமலையில் நான் சார்ந்த நகராட்சி சார்பில் மகாதீபம் மக்கள் நல அறக்கட்டளையிடம் எரிவாயு தகனமேடையை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகனமேடையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2,245 உடல்களை தகனம் செய்துள்ளோம். அதில் 1,546 உடல்கள் ஆதரவற்றோருடையது’’ என்றார். மகளிர் தின விருது, குடியரசு தின விருது, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருது ஆகிய விருதுகளையும் கண்ணகி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x