Published : 10 Mar 2020 09:26 AM
Last Updated : 10 Mar 2020 09:26 AM

விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்த வரி தொகை குறித்து அண்ணா பல்கலை.க்கு வருமானவரி துறை நோட்டீஸ்: தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி 13-ம் தேதி ஆஜராக உத்தரவு

சென்னை

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வரித் தொகைதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் பிடிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு பல்கலைக்கழகம் கட்டவில்லை என்று அகிலஇந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கத்தின் (ஏஐபிசிஇயு) நிறுவன தலைவர் கே.எம். கார்த்திக், வருமானவரித் துறையிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், டிடிஎஸ் தொகை குறித்து விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழக தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரிக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக வருமானவரித் துறை டிடிஎஸ் பிரிவு அதிகாரி ஆனந்தராஜ் அனுப்பிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

23 மண்டலங்கள்

கடந்த 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடந்த பருவத் தேர்வின் விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 23 மண்டலங்களில் நடந்துள்ளது. விடைத்தாள்திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் டிடிஎஸ் தொகையை அண்ணா பல்கலைக்கழகம் செலுத்தவில்லை. எனவே, டிடிஎஸ் வரித்தொகையை முறையாக செலுத்தி, அதற்கான ரசீதுகளுடன் மார்ச் 13-ம் தேதி காலை 11.30 மணிக்குள் வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். டிடிஎஸ் வரியை உரிய தேதிக்குள் முறையாக செலுத்தாவிட்டால், சட்டவிதிகளின்படி, பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐபிசிஇயு தலைவர் கே.எம்.கார்த்திக் கூறியது:

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்த தொகையை அவர்களின் பான்அட்டை எண்களை குறிப்பிட்டுடிடிஎஸ் வரியாக வங்கியில் பல்கலைக்கழகம் செலுத்தவேண்டும்.

ரூ.1.20 கோடி

இந்த தொகையானது ஆசிரியர்களுக்கு மீண்டும் கிடைக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் டிடிஎஸ் வரியை பல்கலைக்கழகம் கட்டவில்லை. அதன்படி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய சுமார் ரூ.1.20 கோடி பணம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இதுகுறித்து வருமான வரித்துறை முழுமையாக விசாரணை நடத்தவேண்டும்.

இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x