

இணையம், செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நமது வெற்றிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் சார்பில் நடைபெற்ற ‘உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சென்னை குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் வைஷ்ணவா மகளிர் கல்லூரியுடன் இணைந்து, ‘உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே’ என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. கல்லூரியின் தாளாளர் எஸ்.என். பட், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விநியோகப் பிரிவு மேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் சைபர் பாதுகாப்பு நிபுணர் வினோத் ஆறுமுகம், உளவியலாளர் ஜான்சி, மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்பின் மேரி, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் பி.மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அவர்கள் பேசியதாவது:
சைபர் பாதுகாப்பு நிபுணர் வினோத் ஆறுமுகம்: உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் எல்லோரும் நடிகர்கள். நண்பர்களுக்கு நண்பர்கள் பழக்கம் மாறுபடும். அதேபோலத்தான் இணைய உலகமும். இணையத்தில் நம் தேடுதலும் அவ்வாறு மாறுபடுகிறது. இணையத்தில் நமக்கு தேவையான, தேவையற்ற தகவல்கள் இரண்டுமே ஏராளமாக இருக்கின்றன. எது நமக்கு தேவை, எது தேவை இல்லை; எதை பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக் கூடாது என்பதை ஆராய்ந்து அறிந்து, அதன்பிறகே இணையத்தை பயன்படுத்த வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, சுய தொழில் என நமக்கு தேவையான நல்ல பல தகவல்கள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் சரியான தகவல்களைப் பெறுவதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை மேம்படும். சமூக வலைதளங்களை நீங்கள் நல்லவிதமாக பயன்படுத்துவதன் மூலமாக, வருங்காலத்தில் சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம், வேலைவாய்ப்பு போன்றவை கிடைக்கும்.
இன்று புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் புகழும், உடனே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உங்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே, இணையத்தையும் சமூக வலைதளங்களையும் நமது வெற்றி, வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ்பின் மேரி: வலைதளங்களில் படங்களை பதிவிடுவதால், பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனனர். இது தொடர்பாக பல புகார்கள் வருகின்றன. எனவே, எக்காரணம் கொண்டும் சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடக் கூடாது.
ஆண் நண்பர்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செல்போனில் உரையாடுவது, சாட்டிங் செய்வது கூடாது. நன்கு அறிமுகமான சிலரே உங்கள் படங்களை வைத்து ஆபாசப் படங்களுடன் மார்ஃபிங் செய்யக்கூடும். எனவே, பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மகளிர் பாதுகாப்புக்கான ‘காவலன்’ செயலியை பெண்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இணையத்தை அறிவு வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
உளவியலாளர் ஜான்சி: நமது அறிவு வளர்ச்சிக்கு செல்போன் இடையூறாக இருக்கிறது. செல்போன் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. நாம் அதற்கு அடிமையாகி உள்ளோம். தேவையற்ற படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது. மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். அறிவை நன்கு வளர்த்துக்கொண்டு, தேவைக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். செல்போனில் நாம் பயன்படுத்தும் செயலி சரியானதா, பாதுகாப்பானதா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் பி. மோகன்: வங்கிச் சேவை அனைவருக்குமே கட்டாயமாகிவிட்டது. ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க நவீன தொழில் நுட்பங்களின் உதவியால் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. கூடவே, முறைகேடுகள், மோசடிகளும் அதிகரித்துவிட்டன.
பல இடங்களில் ஏடிஎம் வாயிலாக மோசடிகள் நடக்கின்றன. ஏடிஎம்களில் டெபிட், கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரகசிய எண்ணைஅடுத்தவர்களுக்கு தெரியாமல் உள்ளிடுவது அவசியம். ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் செல்போன் அல்லது ஏடிஎம் கார்டு ஆகியவற்றை கொடுத்து எந்த உதவியும் கேட்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரி முதல்வர் கீதா, தமிழ்த் துறை தலைவர் செந்தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் பொறுப்பாசிரியர் பிருந்தா சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக, மாணவிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.