

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்புவார்கள்.
இந்தச் சூழலில், காவல் துறை மீது எந்த விமர்சனமும் எழுந்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர். குறிப்பாக, சென்னை போலீஸார் கவனத்துடன் பணியாற்றுமாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
பெண்கள், சிறார்கள் என தேவையின்றி யாரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலைய அறையில் அடைத்து வைக்க கூடாது.
அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும். விசாரணைக் கைதிகள் தற்கொலை போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் செயல்பட வேண்டும்.
முக்கிய வழக்குகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்க வேண்டும். அவர்களது அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.