

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக ரஜினிகாந்த் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் 1971-ல் நடந்த பேரணி குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத் தில் ரஜினிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அதில், துக்ளக் விழாவில் பங்கேற்ற ரஜினியின் பேச்சு, பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகவும், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் உள்ளது. எனவே ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்ய திருவல்லிக்கேணி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பெரு நகர 2-வது குற்றவியல் நடுவர் ரோஸ்லின் துரை, ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்வதா? வேண் டாமா என்பது குறித்து மார்ச் 9-ம் தேதி (நேற்று) தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவர் சார்பில் வழக்கறிஞர் நமோ நாராயணன் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழ கம் தொடர்ந்துள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், விளம்பரத்துக்காக, நீதி மன்ற நேரத்தை வீணடிக்கும் வகை யில் தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரஜினி பேசியதற்கான உரிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது நபர் தாக்கல் செய்துள்ள இந்த இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என மனுதாரர் உமாபதி தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை இன்று தள்ளி வைத்துள்ளார்.