வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்

உலர வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள்.
உலர வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள்.
Updated on
1 min read

நாகை அக்கரைப்பேட்டையில் வெளி நாடுகளுக்கு கடத்துவதற்காக 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 2 டன் கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் அக்கரைப்பேட்டை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகை மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலாநிதி, வனச்சரகர் அயூப்கான் ஆகியோர் கொண்ட குழுவினர் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் கோயில் அருகில் 1 டன் எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகளை வெயிலில் உலர வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டியைச் சேர்ந்த சந்திரசேகர், நாகை கடற்கரைச் சாலை யைச் சேர்ந்த செண்பகம் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அக்கரைப் பேட்டை திடீர் குப்பம் பகுதியில் நடத் தப்பட்ட சோதனையில் ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. முருகானந் தம் என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில் பதப்படுத்தப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வருவது அறிந்து தப்பியோடியவர்களை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.

நாகையில் 2 இடங்களில் மாவட்ட வனத் துறையினரால் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடையுள்ள கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி என தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in