

ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க பெண்ணின் நிலத்தை மோசடி செய்ததாக சென்னையில் ஏசி மெக்கானிக் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீஸார் தேடுகின்றனர்.
அமெரிக்காவில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவருக்கு சென்னை திருநீர்மலையில் ரூ.1.5 கோடி மதிப்பில் நிலம் இருந்தது. அந்த நிலத்தை கடந்த 2018-ம் ஆண்டு, சில மர்ம நபர்கள் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தனர்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதேபோல பெங்களூருவைச் சேர்ந்த சுனிஜித் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பல்லாவரத்தில் உள்ள ரூ.1 கோடி மதிப்பிலான நிலமும் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சுனிஜித் கிருஷ்ணமூர்த்தியும் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். இதில் சரஸ்வதி மற்றும் சுனிஜித் கிருஷ்ணமூர்த்தியைப் போன்று ஆள்மாறாட்டம் செய்ய வைத்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்து விற்பனை செய்தது, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் சுரேஷ் (30) என்பது தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
10-ம் வகுப்பு வரை படித்திருந்தஅவர் மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாகவும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘சென்னை புறநகர் பகுதியில் நிலம் வாங்கி வைத்திருக்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் யார்? என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களைப் போல சிலரை நடிக்க வைத்து ஆள்மாறாட்டம் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக பல புகார்கள் உள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்படுகிறது” என்றனர்.