

தமிழகத்தில் துணைமின் நிலையங்கள், மின்கோபுர வழித்தடங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட மின்சாதனங்களில் பழுதுகள் ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம்.
இதற்காக, அப்பணிகள் நடைபெறும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. 10-ம் வகுப்புக்கான தேர்வும் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக மின்விநியோகம் நிறுத்தப்பட்டால், மாணவர்கள் தேர்வு சமயத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
எனவே, தேர்வு முடியும் வரை இப்பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து உதவிப் பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அவசியம் உள்ள இடங்களில் மட்டும் அதிகாரிகளின் ஒப்புதலுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.