நீலகிரியில் 13, 14-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களின் நினைவுச் சின்னங்களை தெய்வமாக வழிபடும் பழங்குடியினர்

நீலகிரியில் 13, 14-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களின் நினைவுச் சின்னங்களை தெய்வமாக வழிபடும் பழங்குடியினர்
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் 13, 14-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து, வீர மரணமடைந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களை, பழங்குடியினர் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குறு நில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதற்கு சான்றாக பல புராதன சின்னங்கள் இருந்தன. அவை சிதிலமடைந்துவிட்டதால், தற்போது அவற்றை பார்க்க முடிவதில்லை. தெங்குமரஹாடா பகுதியில் அல்லிராணி கோட்டை, குன்னூர் அருகே பக்காசூரன் கோட்டை இருந்தன. காலப்போக்கில் இவ்விரு கோட்டைகளும் சிதிலமடைந்ததால், அவற்றின் சுவர்கள் கூட முழுமையாக இல்லாமல், சில சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

நினைவுச் சின்னங்கள்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம், சிறியூர், ஆனைக்கட்டி ஆகிய பகுதிகளில் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த கல் தூண்கள் 13, 14-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வீர மரணமடைந்தவர்களின் நினைவாக அமைக்கப் பட்டுள்ளன.

இதுதொடர்பாக உதகை அரசு கலைக்கூட காப்பாட்சியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

13, 14-ம் நூற்றாண்டுகளில் கொய்சாலர்கள், விஜயநகர பேரரசுகளின் கீழ் நீலகிரி இருந்துள்ளது. அவர்களின் கட்டுப்பாட்டில் மசினகுடி, ஆனைக்கட்டி, சிறியூர் பகுதிகள் இருந்துள்ளன. அப்போது போரில் வீர மரணமடைந்தவர்கள் மற்றும் வன விலங்குகளிடமிருந்து மக்களை மற்றும் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்காக இந்த கல் தூணிலான நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு, இப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் பூஜை செய்து வருகின்றனர். பல்வேறு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், வெளி நாட்டினர் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

வழிபாட்டுத் தலங்களாக மாற்றம்

இந்த நினைவுச் சின்னங்கள், தற்போது இருளர் பழங்குடியின மக்களின் வழிபாட்டுத் தலங்களாக மாறியுள்ளன. கல் தூண்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு தெய்வங்களாக வணங்குகின்றனர். பழங்குடியின மக்களின் இந்த செயல்களால், வரலாற்று பதிவுகளான புராதன சின்னங்கள் பாதுகாப்பாக உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in