Published : 09 Mar 2020 08:19 PM
Last Updated : 09 Mar 2020 08:19 PM

முதுமலையில் பாசப் போராட்டம்: இறந்த குட்டி அருகிலேயே காத்திருக்கும் யானைகள்

முதுமலை

கடந்த மாதம் கூடலூர் பகுதியில் இறந்த குட்டியுடன் 9 நாட்களாக பாசப் போராட்டம் நடத்திய தாய் யானையைப் போல, தற்போது முதுமலை பென்னை வனத்தில் இறந்து குட்டியின் அருகிலேயே நின்று யானைக்கூட்டம் பாசப் போராட்டம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை பென்னை வனத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது. வனத்துறையினரை நெருங்க விடாமல் இறந்த யானையின் உடல் அருகிலேயே யானைகள் சூழ்ந்துள்ளன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பென்னை வனத்தில் கடந்த 5-ந் தேதி அதிகாலையில் காட்டு யானைகள் கூட்டமாக நின்று பிளிறியவாறு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பென்னை வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை இறந்து கிடப்பதைக் கண்டனர். தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டமாக சோகத்துடன் நின்று கொண்டிருந்தன.

இதையடுத்து இறந்த குட்டி யானையின் உடலைக் கைப்பற்ற வனத்துறையினர் முயன்றனர். ஆனால், காட்டு யானைகள் வனத்துறையினரைத் துரத்தின. அப்பகுதி அடர்ந்த சோலை வனமாக இருப்பதால், எந்த இடத்தில் காட்டு யானைகள் நிற்கிறது என்பது தெரிவதில்லை. இதனால் வனத்துறையினரால் அப்பகுதிக்குச் செல்ல முடியவில்லை. மேலும் பாதுகாப்பு கருதி சுமார் 500 மீட்டர் தொலைவில் நின்று வனத்துறையினர் கடந்த 4 நாட்களாகக் கண்காணித்து வருகின்றனர். காட்டு யானைகள் குட்டி யானையின் உடலை விட்டுச் செல்லும் என வனத்துறையினர் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை அப்பகுதியை விட்டு காட்டு யானைகள் செல்லவில்லை.

இந்நிலையில், குட்டி யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையில் அப்பகுதியில் செல்லும் மின்கம்பிகள் அறுந்து கிடப்பதாகவும், மரக்கிளைகளை காட்டு யானைகள் முறிக்கும்போது, மின்கம்பிகள் மீது விழுந்து, கம்பிகள் அறுந்து இருக்கலாம் என்றும், இந்த சமயத்தில் குட்டி யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பென்னை வனச்சரகர் சுரேஷிடம் கேட்ட போது, ''குட்டி யானை இறந்து 4 நாட்கள் ஆகிவிட்டன. காட்டு யானைகள் நெருங்க விடாததால், 4 நாட்கள் ஆகியும் பிரேதப் பரிசோதனை செய்ய முடியவில்லை. இதனால் தொடர்ந்து வன ஊழியர்கள் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர். காட்டு யானைகள் தானாகவே சென்ற பின்னர் குட்டி யானையின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்படும்'' என்றார்.

கடந்த மாதம் இதேபோல கூடலூர் அருகில் உள்ள பள்ளிப்பட்டி பகுதியில், தாய் யானை உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் தனது இறந்த குட்டியின் அருகிலேயே 9 நாட்களாகக் காத்திருந்து பாசப் போராட்டம் நடத்தியது. பின்னர் குட்டியின் சடலத்தை விட்டுச் சென்றது. தற்போது, இதே போல பென்னை பகுதியில் இறந்த குட்டியின் அருகில் யானைகள் காத்திருந்து பாசப் போராட்டம் நடத்தி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x