

தென்காசி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்ல் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், ‘அச்சன்புதூர் பகுதியில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களால் அதிகமான தொல்லைகள் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட நாய்களும் சாலையில் சுற்றித் திரிகின்றன.
இதனால், மக்களுக்கும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தெருநாய்கள் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் சிலர் யானைகளை சரியாக பராமரிக்காமல் கடைவீதிகளுக்கு அழைத்துச் சென்று, யானையைக் காட்டி பணம் வசூலிக்கின்றனர்.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சாலையில் அழைத்துச் செல்லப்படும் யானைகளை பார்த்து பெண்கள், குழந்தைகள் அச்சப்படும் சூழல் உள்ளது. மேலும், யானையை அதன் பாகன்கள் மூர்க்கத்தனமாக தாக்குவதையும் பார்க்க முடிகிறது. யானைகளை வைத்து பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுடலை என்பவர் அளித்துள்ள மனுவில், ‘செங்கோட்டை வட்டம், நெடுவயல் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் அருகில் இந்த மதுபானக் கடை உள்ளது. மது அருந்துவோர் காலி பாட்டில்களை விவசாய நிலங்களில் வீசிச் செல்கின்றனர். விவசாய பணிக்குச் செல்லும் பெண்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுபானக் கடையால் ஏழை குடும்பங்கள் சீரழிகின்றன. எனவே, இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அச்சன்புதூர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியத் தொகை கிடைப்பதில் அதிகமாக தாமதம் ஏற்படுகிறது. 3 ஆண்களாக மானியத் தொகை கிடைக்காததால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். மானியத் தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில், கடையம் பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகதநாதன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தான்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.