

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தென்காசி மாவட்டம் புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறையினர் வாகனங்களை கண்காணித்து, கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கோளிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கேரள மாநிலத்தையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புளியரை சோதனைச் சாவடியில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்தப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அசன் இப்ராஹிம் ஆய்வு செய்தார். அப்போது, புளியரை கால்நடை உதவி மருத்துவர் ஜெயபால்ராஜா உடனிருந்தார்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் இருந்து கோழிகள், வாத்துகள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதர வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிப்புப் பணி நடைபெறுகிறது.
இந்த பணிகள் தொடர்ந்து 90 நாட்கள் நடைபெறும். 3 குழுவாக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு குழுவிலும் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள்” என்றனர்.