

கூடுதல் வாடகை, மாநகராட்சி வரி விதிக்க தடை செய்ய வேண்டும் என மதுரை எல்லிஸ்நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை எல்லிஸ்நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிப்பில் 640 வீடுகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்கள் குடிசைமாற்று வாரியம் வாடகையை அதிகரித்து கேட்பதாகவும், இதுவரையில்லாமல் மாநகராட்சி வீட்டு வரி, கழிவுநீர் வரி என மொத்தமாக ரூ. 15,000 கட்டணம் செலுத்தச்
சொல்வதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து எல்லிஸ்நகர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்போர் தாழம்பூ மலர் நலச்சங்க தலைவர் எம்.பேகம் கூறியதாவது:
அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை வீடுகளில் வசித்த மக்கள் 1977-ல் கனத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் 1979ல்- குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டிக்கொடுத்தார்.
அப்போது 12.50 ரூபாய் வாடகையில் தொடங்கி தற்போது வாடகை ரூ.250 மற்றும் பராமரிப்பு தொகையாக ரூ.100 செலுத்தி வருகிறோம். இந்நிலையில் குடிசைமாற்று வாரியம் மார்ச் முதல் ரூ.500 வாடகை கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மேலும் இதுவரை நாங்கள் மாநகராட்சிக்கு எந்த வரியும் செலுத்தவில்லை. தற்போது மாநகராட்சி வீட்டு வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம் என 2008 முதல் 2020 வரை ரூ.15,000 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்த தொகையை ஏழைகளாகிய எங்களால் செலுத்த முடியாது. ஏற்கனவே உள்ள வாடகை ரூ.350 மட்டுமே செலுத்த முடியும். எனவே ஆட்சியர் தலையிட்டு கூடுதல் வாடகை மற்றும் மாநகராட்சி வரிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.