மாநிலங்களவை உறுப்பினர் பதவி: ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு ஜி.கே.வாசன் நன்றி

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு ஜி.கே.வாசன் நன்றி
Updated on
1 min read

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பை வழங்கியதற்கு அதிமுக தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“அதிமுக மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்கியிருப்பதற்காக அதிமுகவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவின் படி என்னை மாநிலங்களவை உறுப்பினராக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநிலங்களவைத் தேர்தலில் தமாகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நான் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதுணையாகச் செயல்படுவேன். மேலும், தமாகா சார்பில் என்னை மாநிலங்களவையில் உறுப்பினராக பொறுப்பு வகிக்க, மக்கள் பணியாற்ற அளிக்கப்பட்டுள்ள இந்த நல்ல வாய்ப்பை தமாகா முழுமையாகப் பயன்படுத்தும்.

எனவே தமாகாவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பை அளித்திருக்கும் அதிமுகவுக்கு தமாகா சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாநிலங்கவை உறுப்பினராகத் தாம் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in