Published : 09 Mar 2020 03:13 PM
Last Updated : 09 Mar 2020 03:13 PM

ராமநாதபுரத்தில் 20 வயதான அரச மரம் வேருடன் அப்புறப்படுத்தி மறுநடவு: அம்மா பூங்காவில் மேலும் 30 மரங்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 20 வயதான அரச மரம் வேருடன் அப்புறப்படுத்தப்பட்டு அம்மா பூங்காவில் மறுநடவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் பெயா்த்து அம்மா பூங்காவில் மறுநடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

ராமநாதபுரம் அரசுத் தலைமை மருத்துவமனை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் முதல்வர் தலைமையில் நடந்தது.

இந்நிலையில் அங்குள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த 30 மரங்களை வேருடன் அகற்றி பட்டணம்காத்தானில் உள்ள அம்மா பூங்காவில் நடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது.

வேருடன் அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள்..

இதற்காக சனிக்கிழமை காலையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், ஓசை அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

முதலில் 20 ஆண்டு வயதான அரச மரத்தை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, காலை 11 மணிக்கு அந்த மரத்தைச் சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, அந்த மரம் வேருடன் அகற்றப்பட்டு ராட்சத கிரேனில் ஏற்றப்பட்டது.

பின்னர் அந்த மரத்தை பட்டணம் காத்தானில் உள்ள பூங்காவில் நட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனுமதியும் வாங்கப்பட்டு சுமார் 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த மரத்தை கிரேன் மூலம் தூக்கி மரம் அங்கு நடப்பட்டது. இந்தப் பணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

மரங்கள் மறுநடவு குறித்து ஓசை அமைப்பினைச் சார்ந்த செய்யது கூறுகையில், “ராமநாதபுரம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்கள் மறுநடவு செய்யத் திட்டமிட்டு இதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் வேருடன் பெயா்த்தெடுக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் இருந்து பூங்காவில் நடப்படுகின்றன.

இதற்காக 10 அடிக்கும் மேல் ஆழமாக குழிதோண்டி அதில், அந்த மரம் வளா்ந்த இடத்தின் தாய் மண், வேப்பம் புண்ணாக்கு, தென்னை நார்த்தூள், மண்புழு உரம், சாணம் ஆகியவற்றுடன் மறுநடவு செய்யப்படுகின்றன. இப்பணி விரைவில் நிறைவுபெறும், என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x