

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (09.03.2020) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் சில பெற்றோர்கள் ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தினாலும், வறுமை போன்ற குடும்பச் சூழ்நிலையின் காரணமாகவும், ஒன்றிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை வளர்க்க விருப்பம் இல்லாமல் கள்ளிப் பால் போன்ற விஷமருந்தினை கொடுத்துக் கொலை செய்கின்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
பெண் சிசுக் கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் மதுரை மாவட்ட காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழ்நிலையின்போது தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினைப் பயன்படுத்தலாம். இவை, அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தி வருகிறது.
மேலும், தமிழக அரசு குழந்தைகள் நல அமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக திட்டங்கள் வகுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றது. அவர்களைத் தொடர்பு கொண்டால் அவர்கள் பெண் குழந்தைகளைக் காப்பகத்தில் வளர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
எனவே பொது மக்களில் எவரும் பெண் சிசுக்கொலை குற்றச்செயலில் ஈடுபடக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.