ஊழியர் மரணம்: சேலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

ஊழியர் மரணம்: சேலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
Updated on
2 min read

வாழப்பாடி அருகே மூடியிருந்த டாஸ்மாக் கடைமீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், உள்ளே தூங்கி கொண்டிருந்த விற்பனையாளர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள 264 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த நாவலூரைச் சேர்ந்தவர் செல்வம்(40). இவரது மனைவி ராதா. இவர்களுக்கு தாமோதரன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். செல்வம் வாழப்பாடியை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு அவர் கடையில் தங்கியிருந்தபோது, அதிகாலை 12 மணியளவில் கடை ஷட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதில், பெட்ரோல் கடையின் உள்ளே வழிந்தோடி தீ பிடித்ததில் மது பாட்டில்கள் வெடித்து சிதறி எரிய தொடங்கின.

தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும், பரவாமல் தடுத்தனர். எனினும், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்தன. இதற்கிடையில் கடையின் உள்ளே மயங்கிய நிலையில் இருந்த செல்வத்தை மீட்ட தீயணைப்புத்துறையினர், உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு செல்வம் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

(மரணமடைந்த டாஸ்மாக் ஊழியர் செல்வத்தின் குடும்பத்தினர், உறவினர்கள்)

செல்வத்தின் தந்தை துக்கப்பிள்ளை (65) வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, இதுதொடர்பாக இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விற்பனையாளர் செல்வம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 264 டாஸ்மாக் கடை மற்றும் பார்களை இன்று மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உயிரிழந்த செல்வம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே செல்வத்தின் உடலை பெறுவோம் எனக் கோரி சேலம் அரசு மருத்துவமனையை டாஸ்மாக் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். உடலை ஒப்படைப்பது குறித்து இன்று மாலை வரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in