பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ‘நஞ்சாகும்’காய்கறிகள்: இயற்கை சாகுபடியை பரிந்துரைக்கும் தோட்டக்கலைத் துறை

பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ‘நஞ்சாகும்’காய்கறிகள்: இயற்கை சாகுபடியை பரிந்துரைக்கும் தோட்டக்கலைத் துறை
Updated on
1 min read

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களில் தெளிப்பதால் காய்கறிகளில் நச்சுத்தன்மை காணப்படுகிறது. இதனை தவிர்க்க, இயற்கை சாகுபடி முறையை பின்பற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு தோட்டக்கலைத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதல் ஏற்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த கடைக்காரர்கள் கூறும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி பயிர்களில் விவசாயிகள் தெளிக்கின்றனர். இதனால் காய்கறிகளில் நச்சுத் தன்மை காணப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டில் கேரள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த மாநிலத்துக்கு விற்பனைக்கு வந்த தமிழகத்தில் விளைந்த காய்கறிகளில் அதிக அளவில் நச்சுத்தன்மை இருப்பதைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக உடனடியாக தீர்வு காணுமாறு தமிழக அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியது.

இந்நிலையில் தற்போது தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிப்பதற்காக விவசாயிகள் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக காய்கறிகளிலும் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை இயக்குநரகம், அனைத்து மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் பரிந்துரை செய்ய வேண்டும். தவிர்க்க முடியாதபட்சத்தில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பரிந்துரையின்படி குறைந்த அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களில் தெளிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது;

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதால் அதன் நச்சுத்தன்மையானது காய்கறிகளில் 40 நாள்கள் வரை நீடிக்கிறது. அவற்றை உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது. நிலத்தின் தரம் குறைந்து பயிர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்பதால் நீரும் மாசுபடுகிறது.

பூச்சிக்கொல்லி மருந்து உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். இது, பயிர்களில் ஏற்படும் பூச்சித் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறையாகும்.

அதன்படி, விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதையை பயன்படுத்த வேண்டும். பயிர் சுழற்சி செய்ய வேண்டும். விளக்குப்பொறி அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் ஒட்டுப்பசைப் பொறியை பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளான ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகளை பயன்படுத்தி பயிருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கலாம். இயற்கை மருந்துகளான வேம்பு, நொச்சி, வசம்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in