Published : 09 Mar 2020 09:56 AM
Last Updated : 09 Mar 2020 09:56 AM

மகளிர் குழுவினருக்கு வருமானத்துக்கு வழி தந்த சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு: அரசின் சந்தை வாய்ப்பு உதவிக்கு கோரிக்கை

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த கதிர்நாயக்கனஅள்ளியில் தின்பண்டங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மங்கா மகளிர் குழுவினர்.

தருமபுரி

சிறு தானியம், பயறு வகைகளில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் குழுவினர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், அரூர், பென்னாகரம் உள்ளிட்ட வட்டங்களில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுவினரில் சிலர் பாரம்பரிய நொறுக்குத் தீனிகள், சிறுதானியம், பயறு வகைகளில் தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட தின்பண் டங்கள் போன்றவற்றை தயாரிப் பதன் மூலம் குறைந்த பட்ச பொருளாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.

காரிமங்கலம் வட்டம் மொரப்பூர் அருகே உள்ள கதிர்நாயக்கன அள்ளி கிராமத்தில் மங்கா மகளிர் குழு என்ற அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். 20 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் சாமை, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களில் பிஸ்கட், உருண்டைகள் உள்ளிட்ட தின்பண்டங்களை தயாரிக்கின்றனர். இதுதவிர, தோசை, அடை, முறுக்கு போன்ற உணவு வகைகளை தயாரிக்கத் தேவையான ரெடிமிக்ஸ் வகைகளையும் தயாரித்து விற்பனைக்கு வழங்குகின்றனர்.

மகளிர் திட்டம் உதவி

இதுபோன்ற சுய உதவிக் குழுவினருக்கு மகளிர் திட்டம் மூலம் பயிற்சி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகிறது. மங்கா குழுவின் தலைமைப் பொறுப்பில் இரட்டையர்களான ராமகாந்தம், லட்சுமிகாந்தம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இதுபற்றி கூறியது:

நம் உணவுப் பாரம்பரியம் மகத்துவமானது. அன்று, நம் வீடுகளில் இருந்த பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு மருத்துவருக்கு நிகர். நோயற்ற வாழ்வுக்கான உணவுமுறைகள், நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து விரைவாகவும், முழுமையாகவும், பக்க விளைவுகள் இல்லாமலும் விடுபட உதவும் மூலிகை சிகிச்சை முறைகள் குறித்து அன்றைய பெண்களில் பலருக்கு ஏராளமான அறிவு நிரம்பி இருந்தது.

ஆனால், இன்று வாழ்க்கை முறையும், சூழலும் மாறிவிட்ட நிலையில் பல்வேறு கட்டாயங்களால் மனிதர்கள் இயந்திரங்களைப் போல ஓடிக் கொண்டே இருக்கின்றனர். ஆரோக்கியமான உணவு, தின்பண்டம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து உண்ணக் கூட அவகாசமில்லாத வாழ்க்கை முறையில் இன்று தவிக்கிறோம்.

பெருலாப நோக்கம்

இன்றைய மனிதர்களின் இதுபோன்ற வாழ்க்கை முறையை சில பெருலாப நோக்க நிறுவனங்கள் உள்ளூர வரவேற்கவும், விரும்பவுமே செய்கின்றனர். ஏனெனில் இதுதான் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை பரவலாக்குகிறது. இதற்கிடையில் இவ்வாறான நிறுவனங்களுக்கு இடையிலான வணிகப் போட்டியில் தின்பண்டங்களின் சில ரசாயனங்களின் உதவியுடன் மிகச் சுவை மிகுந்ததாக மாற்றி நுகர்வோரை, குறிப்பாக குழந்தை களை கவர்ந்து இழுக்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு இடையில் ஆரோக்கியம் தரும் உணவு மற்றும் தின்பண்டங்களை தயாரித்து நுகர்வோரிடம் சேர்க்க மகளிர் திட்ட அதிகாரிகள் மூலம் வழிகாட்டுதலை பெற்றோம். இதற்காக பல்வேறு இடங்களில் போதிய பயிற்சிகளையும் வழங்கினர். எனவே, குழுவினர் இணைந்து பயறு வகைகள், சிறு தானியங்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனைக்கு வழங்கி வருகிறோம். அதேபோல, சருமத்தை பாதிக்காத வகையிலான குளியல் சோப்புகளையும் தயாரிக்கிறோம்.

மாவட்டத்தில் எங்களைப் போன்று இன்னும் சில குழுவினரும் இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்கி வருகின்றனர். இந்தத் தொழில் மூலம் குறைந்தபட்ச பொருளாதாரத்தை ஈட்டி வருகிறோம். அத்துடன் உடலையும், உயிரையும் காக்கும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கிறது.

அரசு, நுகர்வோர் ஆதரவு தேவை

எங்கள் தயாரிப்புக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது. இருப்பினும், ரசாயனங்கள் கலக்காத, வெள்ளை சர்க்கரை சேர்க்காத, சுத்தமான எண்ணெயில் தயாரித்த பொருட்களைக் கொண்டு தின்பண்டம் போன்றவை எங்களைப் போன்ற மகளிர் குழுக்களிடம் கிடைக்கிறது என்பதை நுகர்வோரிடம் சேர்ப்பதில் எங்களுக்கு பெரும் சவால் நிலவுகிறது. பெரு நிறுவனங்களைப் போன்று எங்களால் விளம்பரங்களுக்கு செலவழித்து நுகர்வோரை ஈர்க்க முடியாது.

எனவே, ஆரோக்கியம் காக்கும் பொருட்களை தயாரிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து அரசு மூலம் எங்களுக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அரசு விழாக்கள் போன்றவற்றில் சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதன் மூலம் எங்களைப் போன்ற சுய உதவிக் குழுவினர் மேலும் உற்சாகமாக ஆரோக்கியம் காக்கும் பொருட்களை நுகர்வோருக்கு உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டே இருப்போம்.

இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x