

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை-பெங்களூரு ‘உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலை முதல்முறையாக நேற்று பெண் ஓட்டுநர்கள் இயக்கினர்.
கோவையிலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ‘டபுள் டெக்கர்’ (இரண்டடுக்கு) ரயில் சேவை, 2018 ஜூன் 8-ம் தேதி தொடங்கியது. புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு (கே.எஸ்.ஆர்.) ரயில் நிலையத்துக்கு, பகல் 12.40 மணியளவில் சென்றடைகிறது. மறுமார்க்கமாக பகல் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 9 மணியளவில் கோவை வந்தடைகிறது. பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதகர்களை மட்டுமேசேலம் கோட்ட அலுவலகம் நியமித்துள்ளது. அவ்வாறு மொத்தம் 14 டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் இருந்து நேற்று காலை பெங்களூருவுக்கு புறப்பட்ட 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலை பெண் ஓட்டுநர்கள் இயக்கினர். முன்னதாக, பெண் ஓட்டுநர்கள், டிக்கெட் பரிசோதகர்களுக்கு கோவை ரயில் நிலைய இயக்குநர் சதீஷ் சரவணன், முதன்மை வணிக மேலாளர் சிட்டி பாபு மற்றும் பயணிகள் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.