Published : 09 Mar 2020 08:53 AM
Last Updated : 09 Mar 2020 08:53 AM

ரூ.1 கோடியில் இந்திய உணவுக் கழகம் சார்பில் நாட்டிலேயே முதன் முறையாக தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்: பண்டைய பொருட்கள், அரியவகை நெல் ரகங்களை தானமாக அளிக்க வேண்டுகோள்

தஞ்சாவூரில் திறக்கப்பட உள்ள உணவு அருங்காட்சியக கட்டிடம்.

சென்னை

நாட்டிலேயே முதன்முறையாக இந்திய உணவுக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் ரூ.1.23கோடி செலவில் உணவு அருங்காட்சியகம் அமைகிறது.பண்டைய கால பொருட்கள் இருந்தால் தானமாகஅளிக்கு மாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகம் மத்திய அரசின் சிறப்பு சட்டம்மூலம் கடந்த 1964-ல் அமைக்கப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நியாயமான விலையில் சந்தைப்படுத்த வும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்களை நாடு முழுவதும் சீரான முறையில் விநியோகிக்கவும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாப்பதும் இதன் பணியாகும். இதன்மூலம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகநாட்டின் உணவுப் பாதுகாப்பு இந்த அமைப்பு உறுதி செய்து வருகிறது.

இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக உணவு அருங்காட்சியகம் ஒன்றை தஞ்சாவூரில் உணவு பாதுாகப்பு கழகம் அமைக்கிறது.

1964-ல் தொடக்கம்

இதுகுறித்து, இதன் பொதுமேலாளர் (தமிழ்நாடு) ஜே.எஸ். சைஜு கூறியதாவது:

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரில் இந்திய உணவுக்கழகத்தின் தலைமை அலுவலகம் 1964-ல் தொடங்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ரூ.1.23 கோடி செலவில்தஞ்சாவூரில் உணவுஅருங்காட்சி யகம் அமைக்கப்படவுள்ளது. பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்துடன் இணைந்து இந்த அருங்காட்சியகம் அமைகிறது.

இதில் பண்டைய காலம் முதல் தற்போது வரை உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, அவை கிடங்கில் பாதுகாத்து எவ்வாறு விநியோகம் செய்யப்படுகிறது என்பது பற்றிய அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். பிற நாடுகளில் உணவு உற்பத்திக்காக கையாளும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத்தகவல்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.

சேமிப்பு முறை

தமிழகத்தில் 7 மாதங்கள் கிடங்குகளில் சேமிக்கப்படும் அரிசியை பூச்சிகள் உள்ளிட்டவைகளிடம் இருந்து பாதுகாக்கும் முறை குறித்தும் அரிசி கொள்முதல் மற்றும் ரேஷன் விநியோக விவரங்களையும் மெய்நிகர் சுற்றுப்பயணம் (விர்சுவல் ரியாலிட்டி டூர்) மூலம் பார்வையாளர்கள் பார்க்கலாம்.

இதேபோல், காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் மாநிலங்களின் பட்டியல்,இந்தியாவின் முக்கிய உணவுவகைகள், அவற்றின் செய்முறைகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும். தொடு திரைகள், டேப்ளெட்டுகள், ஆர்எஃப்ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமும் உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

விநாடி - வினா போட்டிகள்

மேலும் மாணவர்களுக்கு விநாடி - வினா போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த அருங்காட்சியகம் பயனுள்ளதாக இருக்கும். வரும் ஜுன் மாதம் இதை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உணவுப் பொருட்களை பாதுகாக்க பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், கலன்கள் மற்றும் அரியவகை நெல் ரகங்கள் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை அருங்காட்சியகத்துக்கு தானமாக வழங்கலாம். அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு உணவு பாதுாகப்பு கழக பொது மேலாளர் சைஜு கூறினார். ப.முரளிதரன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x