Last Updated : 09 Mar, 2020 08:44 AM

 

Published : 09 Mar 2020 08:44 AM
Last Updated : 09 Mar 2020 08:44 AM

ரஜினி கூறிய ஒரு விஷயத்தை மட்டும் ஒப்புக்கொள்ளாத மாவட்ட செயலாளர்கள்: தமிழருவி மணியன் விளக்கம்

கூட்டத்தில் உரையாற்றும் ரஜினி

விழுப்புரம்

ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று (மார்ச் 8) மாலை காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 'ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"அரசியலை தூய்மைப்படுத்தவே ரஜினி அரசியலுக்கு வருகிறார். இதுபோல திமுகவில் ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம். அதிமுகவினர் தற்போது ஒவ்வொரு துறையிலும் எப்படி வருவாய் ஈட்டலாம் என திமுகவுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு உள்ளனர். இதனால்தான் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியும் என்று நிரூபிக்கத் தயாரா? இதைத்தான் ரஜினி சொல்கிறார். அப்படி நிரூபித்தால் பொங்கி எழக்கூடிய முதல் மனிதர் ரஜினியாகத்தான் இருப்பார்.

2010-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. அப்போது கூட்டணியில் இருந்தது திமுக. அதன் பின் 2015-ம் ஆண்டு பாஜக அதைத் தொடர்ந்தது. அப்போது எல்லாம் மவுனமாக இருந்துவிட்டு இப்போது திமுகவும், கம்யூனிஸ்டும் போராட காரணம் 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற திட்டம்தான் காரணம்.

3 ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தீர்க்கமாக சொன்னார். மாற்று அரசியலை கொண்டு வருவதற்காக ரஜினி அரசியலுக்கு வருகிறார்.

ரஜினியின் ஏமாற்றம் என்னவென்றால் ரஜினி மன்றத்தினர் மக்களை சென்று சந்திக்கவில்லை என்பதுதான். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் ரஜினியோடு இணைந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். 'சிஸ்டம் சரியில்லை' என்று ரஜினி சொன்னார். அந்த சிஸ்டத்தை கெடுத்தது 50 ஆண்டுகால திராவிட கட்சிகள்தானே?

மாற்று அரசியல் என்றால் நான் ஆட்சியில் அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதுதான் என்று ரஜினி சொன்னார். கட்சி வேறு, ஆட்சி வேறு. இரண்டுக்கும் தலைமை வேறு வேறு. கட்சியில் இருப்பர்கள் ஆட்சிக்கு சென்றால் அது கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர மக்களின் ஆட்சியாக இருக்காது என்றார்.

காந்தி நினைத்து இருந்தால் அவர் இந்தியாவின் பிரதமராக வந்து இருக்கலாம். அவர்தான் ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார். பின்னாளில் நேரு காந்தியின் பேச்சை கேட்கவில்லை. அதிகாரம் வலிமையானது என்பதை உணருங்கள் என்றேன். முதல்வர் பழனிசாமியை சசிகலாதான் தேர்வு செய்தார். அதன்பின் நடப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று ரஜினியிடம் கூறினேன்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி 3 விஷயங்களை பேசினார். அதில், ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும். 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார்.

இதற்கு ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் அடுத்து அவர் சொல்லிய விஷயத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அது என்னவெனில், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என்றதுதான். ரஜினி, அமாவாசை என்றெண்ணி ஒருவரை பதவிக்கு அமர்த்தினால் அவர் பின்னாளில் நாகராஜ சோழனாக உருமாறுவார். அந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்.

கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும். ரஜினி அனைத்துத் தலைவர்களையும் அரவணைக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை. நான் உட்பட யாரையும் முதல்வராக்க நினைக்காதீர்கள் என்று அவரிடம் கோரிக்கை வைக்கிறேன்"

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x