Published : 09 Mar 2020 08:46 AM
Last Updated : 09 Mar 2020 08:46 AM

துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: க.அன்பழகன், 2 எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல்

துறை வாரியான மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் 2 எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கியது. அன்று, தமிழக அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பிப். 17, 18, 19 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. 20-ம் தேதி விவாதத்துக்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அத்துடன் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவை மார்ச் 9-ம்தேதி மீண்டும் கூடும் என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. முதல் நாளில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ப.சந்திரன் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட உள்ளது.

பின்னர் எம்எல்ஏக்கள் மறைந்த கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் முன்னாள்அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும்.

நாளை பேரவைக் கூட்டம் இல்லை. 11-ம் தேதியில் இருந்து மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்குகிறது. முதல்நாளில் வனம், சுற்றுச்சூழல் துறைமானியக் கோரிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். 12-ம் தேதி பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறைகள், 13-ம் தேதி எரிசக்தித் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. பேரவை கூட்டத் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 23 அலுவல் நாட்களில் பேரவை கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x