Published : 09 Mar 2020 08:23 AM
Last Updated : 09 Mar 2020 08:23 AM

டிரான்ஸ்பாண்டர் கொள்முதல் இஸ்ரோவிடம் பணி ஒப்படைப்பு: மீன்வளத் துறை அதிகாரி தகவல்

டிரான்ஸ்பாண்டர் கொள்முதல் செய்யும் பணி இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு, மீன்பிடிப்பில் ஈடுபடகடலுக்குச் செல்லும் மீனவர்கள் எதிர்பாராத வகையில் விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து மீட்பது சிரமமாக இருந்து வருகிறது. இந்நிலையில், விசைப் படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட உள்ளது.

செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இக்கருவியானது மீன்பிடி படகுகளைக் கண்காணிக்கவும், 200 கடல் மைல்கள் தொலைவு வரை உள்ள மீன்பிடி படகுகளுக்கு தேவையான அவசர உதவிகளை அளிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

சென்னை, கடலூர், தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 507 படகுகளுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட்டது. இவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்து தொழில்நுட்ப ரீதியாக கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஒரு சில மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள விசைப் படகுகளில் பொருத்தப்பட உள்ளன. இக்கருவியை கொள்முதல் செய்யும்பணி இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட்டால் மீன்வளம் அதிகம் இருக்கும் பகுதி, வானிலை நிலவரம், கடலில் எந்தப் பகுதியில் உள்ளனர் என்பதை மீனவர்கள் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசுக்குச் சொந்தமான ‘எஸ்-பாண்ட்’ என்ற சாட்டிலைட்டுடன் டிரான்ஸ்பாண்டர் இணைக்கப்படும். இதன் மூலம், தகவல் உடனுக்குடன் பரிமாறப்படும்.

ஆபத்து காலங்களில் மீனவர்கள் எஸ்ஓஎஸ் பொத்தானை அழுத்தினால் இருக்கும் இடம் தெரிந்துவிடும். தற்போதைக்கு இருக்கும் இடம் தெரியாத காரணத்தால்தான் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக காப்பற்ற முடியவில்லை. எனவே, இவை பயனுள்ளதாக இருக்கும்.

தொழில்நுட்பரீதியாக சரியாக கருவி செயல்படுகிறதா என்பதை உறுதி செய்துகொண்டுதான் டிரான்ஸ்பாண்டரை வாங்க வேண்டும். எனவே, கொள்முதல் செய்யும்பணியை இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் கொள்முதல் செய்து வழங்கியவுடன் ஒரு சில மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து விசைப்படகுகளிலும் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x