

தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்திஉள்ளார்.
சென்னை அடையாரில் உள்ளடி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பங்கேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
உலக அளவில் புராதன பொதுவுடமை சமுதாயம் என்ற சமூக அமைப்பு ஒன்று இருந்தது. அதில், பெண்கள் தலைவர்களாக இருந்தார்கள். ஆனால், மிகவும் குறுகிய காலத்தில் அது மறைந்து போய்விட்டது.
அதன் பிறகு வந்த சமுதாயங்கள் ஏற்றத் தாழ்வுடன் அமைந்தது. அதில் முதல் அடிமை பெண்கள்தான். பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் முன்பு இருந்தது. இவற்றை எல்லாம் கடந்துதான் பெண்கள் வந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக பெண் சக்தியை அடிமட்டத்தில் பலப்படுத்த வேண்டும். பெண்களை அரசியல் ரீதியாக மாற்றிவிட்டால், அவர்களை பணம்கொடுத்து யாரும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பதிப்பு இல்லை என்று கூறி வந்த நிலையில், தற்போது ஒருவர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நமது மருத்துவத் துறை எப்படியாவது அதை சரிசெய்து கோவிட்-19 வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவமனையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து தங்களிடம் உள்ள தொழில்நுட்ப உதவியுடன் கோவிட்-19 வைரஸ் ஏழை,எளிய மக்களை சென்றடையாமல் பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமை ஆகும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.