

இ.ராமகிருஷ்ணன்
சென்னையில் 20 அரசு பள்ளிகளை காவல் துறையினர் தத்தெடுத்துள்ளனர். இதில் 13 பள்ளிகளின் வளாகத்தை சீர்செய்து, வர்ணம் பூசி அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளனர்.
வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் முனைவர் ஆர்.தினகரன் தலைமையிலான தனிப்படையினர் பள்ளிக்கூடங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள 20 அரசு பள்ளிகளை தத்தெடுத்து அவற்றின் தரம் மற்றும் உள்கட்டமைப்புகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்த திட்டமிட்டனர். இதற்காக அப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்தனர்.
அவர்களிடம் இருந்துநிதி திரட்டி பள்ளிகளுக்கு தேவையானமேசை, நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள், மின் விசிறி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். பள்ளி வளாகத்தை சுற்றிபசுமையான தோட்டம், மழை நீர்சேகரிப்பு மற்றும் பள்ளிச் சுவர்களில்மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினர்.
அதன்படி முதல் கட்டமாக திரு.வி.க நகர், கே.சி கார்டனில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி, புளியந்தோப்பு சென்னை நடுநிலைப்பள்ளி, நொளம்பூரில் உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட 13 அரசு பள்ளிகள் கடந்த 6 மாதங்களில் சீரமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் கூறும்போது, “குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்கிறோம். அவர்களில் பலருக்கு அவர்களது பிறந்த தேதி, வருடம்கூட தெரிவதில்லை. அவர்கள் படித்த பள்ளிக்குச் சென்று பிறந்த தேதியை தெரிந்து கொண்டு வயதை கணக்கிடுகிறோம்.
அப்போது சில பள்ளி வகுப்பறைகள் சிதிலமடைந்து அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதை கண்டேன். எனவே, இவற்றை சீர் செய்து கல்வித்தரத்தை உயர்த்துவதன் மூலம் எதிர்கால குற்றங்களை வெகுவாக தடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். கடுமையான தண்டனைகள் மட்டுமின்றி, சிறப்பான கல்வி மூலமும் குற்றங்களை தடுக்க முடியும்.
அதன் வெளிப்பாடாகத்தான் 20 பள்ளிகளை தத்தெடுத்தோம். தற்போது 13 பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தி ஒப்படைத்துள்ளோம். மீதமுள்ள பள்ளிகளிலும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மாணவர்களும் உற்சாகமாக உள்ளனர். இந்த பணி மன நிறைவை தருகிறது’ என்றார்.