Published : 09 Mar 2020 07:46 AM
Last Updated : 09 Mar 2020 07:46 AM

சென்னையில் மகளிர் தினவிழா கோலாகலம்

சென்னையில் அரசுத் துறைகள் மற்றும் அதிமுக சார்பில் உலக மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அதிமுக மகளிரணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழா ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து, பூச்செண்டுகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்கள் தூவி ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கேக் வெட்டி, கட்சி மகளிர் அணியினருக்கு வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் வெ.சரோஜா, கட்சியின் மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த், மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. அதில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், சமூகநலத் துறை அமைச்சர் வெ.சரோஜா, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் மகேசன் காசிராஜன், மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் ஆகியோர் பங்கேற்று அவ்வையார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

சமூகநலத் துறை சார்பில் தியாகராய நகரில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெ.சரோஜா ஆகியோர் பங்கேற்று மகளிர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பின்னர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் முதிர்வுத் தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.

இவ்விழாவில் சமூகநல ஆணையர் ஆபிரஹாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநர் கவிதா ராமு, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலர் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். விழாவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x