

தக்காளி விலை ரூ.2 வரை சரிந்து விட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தலைவாசல் சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாகச் சரிந்து ரூ.2 ஆகக் குறைந்தது. இதனையடுத்து அருகில் உள்ள ஏரியில் தக்காளியை கொட்டி விட்டுச் சென்றனர் விவசாயிகள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளைக்காடு, தலைவாசல் பகுதிகளில் விவசாயிகள் பெரிய அளவில் கொடி தக்காளி சாகுபடி செய்தனர். இந்தத் தக்காளியை தலைவாசல் சந்தையில் விற்பது வாடிக்கையாகும்.
தற்போது விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமானதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி ரூ.2 க்குக் கூட விற்காமல் போனதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
இதனால் விற்றது போக மீதமுள்ள தக்காளிகளை அருகில் உள்ள ஏரிகளில் கொட்டி விட்டுச் சென்றனர்.
அதாவது ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவழித்து கொடியமைத்து தக்காளி பயிரிடப்படுகிறது. ஆள் கூலி, வண்டி வாடகை, சந்தைச் சுங்கம் என்று அனைத்தையும் சேர்த்தால் கிலோ ரூ.2 ற்கு மட்டுமே விற்க முடியும் என்றால் பெருத்த நஷ்டமே ஏற்படும்.
விலை சரியும் காலக்கட்டங்களில் தக்காளிகளை தூக்கி எறியாமல் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட பதன வசதிகள் உள்ள கிட்டங்கிகள் அவசியம் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.