

மலையாள நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூவில் மலையாள நடிகை ஜெயபாரதிக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்று முன்தினம் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகளை அவர் சரிபார்த்தார். அப்போது, 31 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநர் பாலக்காட்டை சேர்ந்த இப்ராஹிம் (50), நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி ஹரிகுமார் (25) ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயபாரதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இப்ராஹிம், ஹரிகுமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
39 பவுன் கொள்ளை
மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (33). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 6-ம் தேதி பிரபு தந்தையின் நினைவு நாள் நிகழ்ச்சி அவரது வீட்டில் நடந்தது. இதில் பிரபுவின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் தனது தாயின் 39 பவுன் நகைகளை பிரபு படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.