

யாருக்கு அதிகாரம் என்ற போட்டியே நடக்கிறது. இதில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியமையும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான மகளிர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழாவில் பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:,
கடந்த 4ஆண்டுகளில் மக்கள் சிரமப்படும் அளவுக்கு மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. புதுச்சேரியில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. முதல்வர் ஆட்சி நடக்கிறதா ஆளுநர் ஆட்சி நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் மாநில நிர்வாகியான ஆளுருக்கும் இடையில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியே நடக்கிறது. இதில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
எந்த ஒருஅறிவித்த திட்டத்தையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் கேள்வி கேட்டால் பிறர் மீது பழியை கூறி முதல்வர் தப்பித்து கொள்கிறார். பிறர் மீது பழி சொல்லியே ஆட்சியை நடத்துகிறார். அடுத்த ஆண்டு புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மலரும் என்று குறிப்பிட்டார்.