Published : 08 Mar 2020 06:22 PM
Last Updated : 08 Mar 2020 06:22 PM

‘‘பீதி வேண்டாம்;  எல்லோருக்கும் முகக் கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை’’- அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி 

கரோனா வைரஸ் எதிரொலியால் எல்லோருக்கும் முகக் கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோய் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. கரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

கரோனா வைரஸ் எதிரொலியால் எல்லோருக்கும் முகக் கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை. இருமல், காய்சல், மூச்சுத்திணறல் வந்த பிறகே கரோனா பரவும் நிலை உள்ளது. இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

சீனா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பானில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கரோனா ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவதை 100 சதவீதம் தடுத்து வருகிறோம்.

கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கரோனா பரவியததில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மருத்துவ விதிகள் காரணமாக நோயாளியின் குறித்த துல்லியத் தகவல்களை வெளியிட வில்லை. தமிழகம் முழுவதும் 300 படுக்கைகள் தயாராக உள்ளன, 10 லட்சம் முகக் கவசங்கள் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x