Published : 08 Mar 2020 11:40 AM
Last Updated : 08 Mar 2020 11:40 AM

அறிவியல் வார்த்தைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும்: ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவுரை

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் பேசும் ராணுவ விஞ்ஞானியும் பெங்களூரு தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குநருமான வி.டில்லிபாபு. அருகில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர்.

விருதுநகர்

தமிழில் புதிது புதிதாக அறிவியல் தொழில்நுட்ப வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று ராணுவ விஞ்ஞானியும் பெங்களூரு தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குநருமான வி.டில்லிபாபு வலியுறுத்தினார்.

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் "நுட்பம் 2020" என்ற தலைப்பில் அறிவியல் தொழில்நுட்ப தமிழ் மாநாடு நேற்று நடைபெற்றது. பேராசிரியர் உதயகுமார் வரவேற்றார்.

இதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

தாய் மொழிக் கல்வியால்தான் சுய சிந்தனை வளரும். நம்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் மூலம் பாதுகாப்பு, ஆராய்ச்சி, பருவநிலை மாற்றம், விவசாயம், நீர் ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒன்றைக் கண்டுபிடித்து வந்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இன்று 4 வாரங்களுக்கு ஒன்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்தினால் நாம் வெற்றி பெறலாம் என்றார்.

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியதாவது:

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் பட்டியலில் இந்தி 3-வது இடத்திலும், தமிழ் 15-வது இடத்திலும் உள்ளன. 7.7 கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. ஆங்கில மொழி தாக்கத்தால் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள பலமொழிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு மொழி இணையத்தில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எனவே இளைஞர்கள் தங்கள் துறை சார்ந்த தகவல்களையும், தங்களுக்குப் பிடித்த விஷயங்களையும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அப்போது தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கும். தமிழ் மொழிக்கு ஒருங்கிணைந்த உலகலாவிய ஒரு அமைப்பு தேவை. அறிவியல் தொழில்நுட்பப் பதிவுகள் தமிழில் அதிகம் தேவை. அப்போது அதிகம்பேசப்படும் மொழியாகத் தமிழ் மலரும்.

ஒரு மொழியை மறந்துவிடும்போது அதன் வேர்களையும் நாம் மறந்துவிடுகிறோம். எனவே, தமிழில் புதிது புதிதாக அறிவியல் தொழில்நுட்ப வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பல துறை சார்ந்த கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். இது இணையத்தில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், விஞ்ஞானி வி.டில்லிபாபு, மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் எழுதிய "மண்ணும் விண்ணும்" என்ற புத்தகம்வெளியிடப்பட்டது. விழா குருந்தகடை மயில்சாமி அண்ணா துரை வெளியிட்டார். பதிவாளர்வி.வாசுதேவன் வாழ்த்துரையாற்றி னார். பேராசிரியர் சிவா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x