

திருவாரூரில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்கச் செல்லும் வழியில், நெல் நடவுப் பணி நடைபெற்ற வயலைப் பார்வையிட்ட தமிழக முதல்வர், விவசாய தொழிலாளர்களுடன் நடவுப் பணியில் ஈடுபட்டார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க நாகையிலிருந்து வருகை தந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, நெல்மணிகளுடன் கூடிய மாலையை முதல்வருக்கு விவசாயிகள் அணிவித்தனர்.
தொடர்ந்து, விவசாயிகள் மத்தியில் முதல்வர் பேசியதாவது:
பல ஆண்டுகளாக உரிமைக்காக விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். விவசாயிகளின் எண்ணம் ஈடேறும் வகையில் உரிமைக்குரல் ஒலிக்கின்ற வகையில், விவசாயிகளின் மனம் குளிரும் விதமாக, டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், பிரச்சினைகளைக் களைய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன். விவசாயிகளின் பிரச்சினைகளைக் களைய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உங்களின் முழு ஒத்துழைப்போடு அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றும். விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்.
முன்னதாக காரில் வந்து கொண்டிருந்தபோது, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி என்ற இடத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த முதல்வர், காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி வெறும் காலுடன் வரப்பில் நடந்து சென்று நடவு வயலைப் பார்வையிட்டார்.
அங்கு நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர், நாற்றை வாங்கிக் கொண்டு வயலில் இறங்கி நடவுப் பணி யில் ஈடுபட்டார்.
அப்போது, அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஆர்.துரைக்கண்ணு, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.