Published : 08 Mar 2020 10:32 AM
Last Updated : 08 Mar 2020 10:32 AM

கல்லணைக் கால்வாய் மேம்பாட்டு திட்டம் ரூ.2,298 கோடியில் விரைவில் தொடங்கப்படும்: திருவாரூர் பாராட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு

ரூ.2,298 கோடி மதிப்பிலான கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி பாராட்டும் விழா காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சார்பில் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் பேசியதாவது:

8 ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்தபோதும் முதல் சட்டமுன்வடிவை தாக்கல் செய்தது டெல்டா வேளாண் மண்டலத்துக்கான சட்ட முன்வடிவு தான். இது இறைவனால் விவசாயிகளுக்காக கொடுக்கப்பட்ட கொடை.

விவசாயத்தில் லாபம் குறைந்ததால் இந்த தொழில் சற்று குறைந்திருக்கிறது. விவசாயிகளின் மதிப்பும் சற்று குறைந்திருக்கிறது. விவசாயிதான் சொந்தக்காலில் நிற்கக் கூடியவர். லாபம் குறைவாக இருக்கலாம். எனினும் மனநிறைவோடு தொழில் செய்பவர்கள் விவசாயிகள். விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான் மற்ற அனைவரும் சோற்றில் கைவைக்க முடியும். எவ்வளவு செல்வம் இருந்தாலும் உணவு இருந்தால் தான் உயிர்வாழ முடியும்.

ஒவ்வொருவரும் முதல்வர்

இவ்வளவு பெருமைகளுக்குரிய விவசாயிகளை நான் மகிழ்ச்சியோடு இங்கு பார்க்கிறேன். விவசாயியான நான் முதல்வராக இருக்கிறேன். இங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரும் முதல்வர்தான்.

தமிழகத்தில் 65 சதவீதம் பேர் விவசாயிகள்தான். விவசாயம் கடினமான தொழில். இரவு, பகல், வெயில், மழை பாராமல் உழைப்பவன் விவசாயி. நான் முதல்வர் என்ற முறையில் அனைத்து தரப்பு மக்களையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளின் நிலையை உயர்த்த வேண்டும். அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

வழக்குகளை திரும்பப் பெற

இங்கு காவிரிக்காக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை திரும்பப் பெற வேண்டும் இங்கு பேசியவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது பலருக்கு பிடிக்கவில்லை. மத்திய அரசு தானே இந்த சட்டத்தை போட முடியும் என நாடாளுமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த எம்பி ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரோ மாநில அரசுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது என தெளிவாக சொல்லிவிட்டார்.

டெல்டா பகுதி விவசாயிகள் அச்சப்பட வேண்டியதில்லை. இனி எந்த காலத்துக்கும் இந்த சட்டம் துணை நிற்கும். இங்கு அரசியல் சார்பற்ற விவசாய சங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசை அணுகி தங்களது பிரச்சினைகளை தெரிவித்து வருகிறார்கள். அதை நாங்கள் தீர்த்து வருகிறோம்.

குடிமராமத்து திட்டம்

குடிமராமத்துத் திட்டம் மிகப் பிரம்மாண்டமான திட்டம். பொதுமக்கள், விவசாயிகளிடம் சிறப்பான திட்டம் என வரவேற்பு பெற்றதால் முதல் ஆண்டில் ரூ.100 கோடி, இரண்டாவது ஆண்டில் ரூ.329 கோடி, மூன்றாவது ஆண்டில் ரூ.499 கோடி ஒதுக்கப்பட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிறது.

இதனை செயல்படுத்த நீர் மேலாண்மை என்ற திட்டத்தை ஏற்படுத்தி ஓய்வுபெற்ற பொறியாளர்கள் 5 பேரை நியமித்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்தையும் எதிர்க்கின்றனர், குறை சொல்லுகின்றனர். ஆனால், இந்த திட்டத்தை விவசாயிகள் பாராட்டுகின்றனர். அதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தடுப்பணைகள் கட்டும் திட்டம்

மழைநீர் வீணாகும் இடங்களில் மூன்றாண்டு திட்டமாக தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதற்கு இதுவரை ரூ.650 கோடிக்கு ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

உணவு தானிய உற்பத்திக்கான மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருதை 5 முறை தமிழகம் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7,618 கோடியை பெற்றுத் தந்துள்ளோம்.

விவசாயிகளுக்கு ரூ.48,000 கோடி பயிர்க்கடன் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம் ரூ.2,298 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடக்க விழா விரைவில் நடைபெறும். காவிரி உப வடிநிலம் பாசன அமைப்புகளை மேம்படுத்த ரூ.5,590 கோடியில் திட்டமிடப்பட்டு, நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியைப் பெற்று விரைவில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

உணவு பதப்படுத்தும் தொகுப்பு 8 இடங்களில் அமைக்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இது திருவாரூர் மாவட்டத்தில் மூங்கில்குடி கிராமத்தில் அமைக்கப்படும். அதேபோல, ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி அங்காடிகள் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும்.

நெல் பாதுகாப்பு மையம்

மறைந்த நெல் ஜெயராமன் நினைவை போற்றும் வகையில் அவர் பெயரில் நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். பசுமைக்குடில் சாகுபடி, பந்தல் சாகுபடி, நிலப்போர்வை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். ரூ.33 கோடி மதிப்பில் அவை செயல்படுத்தப்படும்.

கும்பகோணத்தில் வெற்றிலை சிறப்பு மையம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும். முந்திரி சாகுபடியில் அடர் நடவு சாகுபடி தொழில்நுட்பத்தை 2,500 ஏக்கரில் செயல்படுத்த ரூ.6.27 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள இரண்டு நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

47 இடங்களில் துணை வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டித் தரப்படும். புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள ஏதுவாக விவசாயிகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் மாபெரும் கண்காட்சி ஒன்று நடத்தப்படும்.

அதிக சக்தி கொண்ட நிலம் சமன்படுத்தும் கருவிகள், ரொட்டோவேட்டர் இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்படும்.

கோதாவரி- காவிரி இணைப்பு

இதைவிட முக்கியமாக கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரிக்கு தடையில்லாமல் தண்ணீர் கொண்டு வரப்படும். பாரத பிரதமர், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். தெலங்கானா முதல்வர், ஆந்திரா முதல்வர்கள் இத்திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இதன்மூலம் இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. இவ் வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x