

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருடு போன பழமையான 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன, அவற்றை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் கரந்தை ஜெயின் தெருவில் ஆதீஸ்வர சுவாமி என்கிற ஜெயின் கோயில் உள்ளது. இதில், தலா ஒன்றரை அடி உயர ஆதீஸ்வரர் சிலை, 24-வது தீர்த்தங்கரர் சிலை, சரஸ்வதி சிலை, ஜோலமாலினி சிலை, சரவண யக்ஷன் சிலை, தலா ஒரு அடி உயரமுடைய பஞ்சமேரு சிலை, மகாவீரர் சிலை, தலா அரை அடி உயர தார்நேத யக்ஷன் சிலை, பத்மாவதி யக்ஷினி சிலை, நந்தீசுவரர் சிலை, தலா முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கள் சிலை, நவதேவதை சிலை உள்ளிட்ட 22 சிலைகளை, மர்ம நபர்கள் கடந்த ஜன.19-ம் தேதி இரவு கோயிலின் பின்புறக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் அறங்காவலர் அப்பாண்டைராஜன் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும்,தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோரின் உத்தரவின்படி, மேற்குக் காவல் நிலைய ஆய்வாளர் ஜி.செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இந்த தனிப்படையினர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில் மர்ம நபர்கள் 4 பேர் சிலைகளைத் திருடி, வேனில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள சுங்கான்திடல் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சரவணன் என்கிற ராஜேஷ்(40) கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின்பேரில் கரந்தையைச் சேர்ந்த பி.சண்முகராஜன்(45), சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்த பி.ரவி(45), நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த வி.விஜயகோபால்(37) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், ராஜேஷின் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உலோகச் சிலைகளும் மீட்கப்பட்டன.
திருடு போன 48 நாட்களுக்குள் இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.