

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அண்ணாவிடம் அன்பு காட்டி, கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்து திமுக தொண்டர்களை கடைசிவரை வழிநடத்திய பேராசிரியர் க.அன்பழகன், திராவிட இயக்கத்தின் வரலாறாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 1922 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தவர் க.அன்பழகன். தந்தை கல்யாணசுந்தரனார். தாயார் சுவர்ணம்பாள்.
பெரியாரின் திராவிட இயக்கம் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்களும், இளைஞர்களும் அணி அணியாக திராவிட இயக்கத்தில் இணைந்தனர். திருவாரூரில் பிறந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஹானர்ஸ் படித்த அன்பழகனையும் திராவிட இயக்கம் விட்டுவைக்கவில்லை. பெற்றோர் வைத்தராமையா என்ற பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர் கொள்கைப் பிடிப்புடன் திகழ்ந்தார். பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்ட அவர், பெரியாருக்கு அடுத்து பெரும் தலைவராக இருந்த அண்ணாவின் அன்பை பெற்றார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) படித்த அன்பழகன், 1944 முதல் 1957 வரை அந்த கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் சென்னைவரும்போதெல்லாம் புரசைவாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டில்தான் அண்ணா தங்குவார். இதனால் இருவருக்குமான நெருக்கம் அதிகமானது. அண்ணாவின் மீதான அன்பால், அவர் திமுகவை தொடங்கியதும் அக்கட்சியில் இணைந்தார் அன்பழகன். 1957 சட்டப்பேரவை தேர்தலில் திமுக முதன்முதலாக தேர்தல் களத்தில் இறங்கியது. அப்போது வெற்றிபெற்ற 15 பேர் தமிழகத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தனர். அவர்களின் முக்கியமானவர் அன்பழகன். திமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக அண்ணாவும், துணைத் தலைவராக அன்பழகனும், கொறடாவாக கருணாநிதியும் இருந்தனர்.
முதல்முறை எம்எல்ஏ
1957-ல் சென்னை எழும்பூர்தொகுதியில் இருந்து சட்டப்பேர வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் கல்லூரிப் பணியை துறந்து முழுநேர அரசியல்வாதியானார் க.அன்பழகன். அன்று தொடங்கிய அவரது அரசியல் பயணம், அவரது மறைவு வரை தொடர்ந்தது.
எழும்பூர் (1957), புரசைவாக்கம் (1971, 1977, 1980), பூங்கா நகர் (1984), அண்ணா நகர் (1989), துறைமுகம் (1996. 2001, 2006) என்று 9 முறை சட்டப்பேரவை உறுப்பினர், 1962-ல் சட்ட மேலவைஉறுப்பினர், 1967-ல் திருச்செங்கோடு தொகுதி மக்களவை உறுப்பினர், பின்னர் சமூகநலத் துறை அமைச்சர் (1971-75), கல்வி அமைச்சர் (1989-91, 1996-2001), நிதி அமைச்சர் (2006-11), எதிர்க்கட்சித் தலைவர் (2001-06) என்று அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் கோலோச்சினார் அன்பழகன். 1984-ல் இலங்கைத் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
பொதுச் செயலாளராக..
அண்ணாவுக்கு மிக நெருக்கமாக இருந்த அன்பழகன், அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதியின் தலைமையை ஏற்றார். அதன்பிறகு திமுகவில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் விலகியபோதும், கட்சிபெரும் பிளவுகளை சந்தித்தபோதும் கருணாநிதிக்கு உறுதுணையாகவே இருந்தார். கருணாநிதியைவிட ஒன்றரை வயது மூத்தவர்என்றாலும், அவருக்கு அடுத்தஇடத்தில் இருப்பதை பெருமையாகவே கருதினார். அதனால் கருணாநிதியும் அன்பழகனுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். எந்த மேடையாக இருந்தாலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியதில்லை.
1972-ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கிய பிறகு, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியையும், 1977-ல் திமுகவில் இருந்து வெளியேறிய நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைந்த பிறகு, அவர் வகித்த வந்த பொதுச் செயலாளர் பதவியையும் அன்பழகனுக்கே அளித்தார் கருணாநிதி. 1977 முதல் மறையும் வரை 43 ஆண்டுகாலம் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வரலாறு படைத்துள்ளார் அன்பழகன்.
அரசியலில் நீண்ட காலம் நிலைத்திருப்பது பெரும் சாதனை. அரசியலில் தனக்கான இடத்தை உணர்ந்துகொண்டவர் அன்பழகன். எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரையும் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல்திமுக ஆட்சிக்கு வந்தும் இரண்டேஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. 1991-ல் ராஜீவ் படுகொலையால் திமுக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. 1993-ல்திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைகோ, மதிமுகவை தொடங்கினார். இதுபோன்ற சோதனையான அனைத்து காலகட்டங்களிலும் கருணாநிதிக்கு துணையாக நின்றார்.
ஸ்டாலினுக்கு ஆதரவு
கருணாநிதி உடல்நலக் குறைவால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டபோது, திமுக செயல் தலைவராகவும், கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகவும் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட, தனது முழுஆதரவை வழங்கினார். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்தான் தலைவர் என்று அவர் அறிவித்தது ஸ்டாலினுக்கு பெரும் பலத்தை தந்தது.
பெரியாரின் கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்விடுதலை, சமூக நீதி கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அவர், கடைசிவரை அதில் உறுதியாக நின்றார். அரசியல் மேடையாக இருந்தாலும், அரசு மேடையாக இருந்தாலும் அவரது பேச்சில் திராவிட இயக்க கொள்கைகளின் தாக்கம் இருக்கும். ஆழமான சிந்தனை, ஆதாரங்களுடன் அனைவரையும் கவரும் வகையில் பேசக் கூடியவர்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் வாயடைத்துப் போகும் வகையில் பதில் அளிக்கக் கூடியவர். கோபப்பட வேண்டிய இடத்தில் கொந்தளிக்கவும் செய்வார். ஆனாலும் யாருடைய மனமும்புண்படும்படி அவர் ஒருபோதும் பேசியதில்லை. அதனால்தான் திமுகவினர் மட்டுமல்லாமல், திமுகவின் அரசியல் எதிரிகளும் அவரை மரியாதையோடு ‘பேராசிரியர்’ என்றே அழைத்தனர்.
திமுக தலைவரான கருணாநிதி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட்டார். திமுக தொண்டர்களுக்கு அண்ணா வழங்கிய ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற கோட்பாட்டுக்கு முன்னுதாரணமாக அரை நூற்றாண்டுகள் வாழ்ந்து காட்டினார்.
வரலாறு படைக்க வேண்டும் என்ற வேட்கை, பொது வாழ்வில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும். ஆனால், ஒரு சிலரது வாழ்க்கையே வரலாறு ஆகிவிடுகிறது. அதில் க.அன்பழகனும் ஒருவர்.திராவிட இயக்கத்தின் வரலாறாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் க.அன்பழகன்.