

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி மீன் பிடிக்க சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் இலங்கையில் உள்ள உறவினர்களை தமிழக பக்தர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 6 மற்றும் 7-தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 2,028 ஆண்கள், 450 பெண்கள், 92 குழந்தைகள் என 2,570 பேர் கலந்து கொண்டனர்.
அந்தோணியார் ஆலயத்தில் நெடுந்தீவு அருட் தந்தை எமில் பவுல் நேற்று முன்தினம் கொடியை ஏற்றிவைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்திரன், இலங்கை பாதுகாப்புப் படைத் தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன, யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜ ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு இரவு 8 மணியளவில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை வலம் வந்தது. இந்த இரு நிகழ்வுகளில் இந்தியா, இலங்கை பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிழாவின் 2-ம் நாளான நேற்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருவிழாவில் சிங்கள மக்களும் கலந்து கொண்டதால் சிங்கள மொழியிலும் திருப்பலி நடைபெற்றது.
இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி மீன் பிடிக்கவும், இருநாட்டு மக்களும் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் கச்சத் தீவு திருவிழா முடிவடைந்தது.
இத்திருவிழாவில் இந்தியா, இலங்கையில் இருந்து சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட பக்தர்கள் இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.
எஸ். முஹம்மது ராஃபி