

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
பழனியில் இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் தேவையற்றவை. உண்மையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பிரச்சினைகள் இருந்து அதிலுள்ள நியாய, அநியாயங்களை வைத்து போராட்டம் நடத்தினால் தவறல்ல.
ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எவ்வித பிரச்சினையுமே இல்லாத போது காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிடுவது கண்டிக்கத்தக்கது. இதைவைத்து மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்த திட்டமிடுகின்றனர்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவராக ஜெகதீஷ்குமார் நியமன விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் காவிமயம் தெரிகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
அப்படியென்றால் ஸ்டாலின் தேசியக்கொடியில் உள்ள காவியையும் கருப்பு நிறமாக மாற்றவேண்டும் என்று விரும்புகிறாரா? இந்திய தேசியக்கொடியில் உள்ள மூவர்ணங்களில் காவிநிறம் இருப்பதை மறந்துவிட்டு தற்போது காவிநிறத்தை கேலி செய்வது தேசியக்கொடியை அவமானப்படுத்துவது போல உள்ளது.
மதம் வேறு, மொழிவேறு இந்தியா முழுவதும் மொழியால் வேறுபட்டிருந்தாலும், மதத்தால் இந்துக்கள் என்பதை மறுக்கமுடியாது.
கோயில்களில் சைவ ஆகம முறைப்படி நான்கு வேதங்களின் அடிப்படையில் குடமுழுக்கு நடைபெறவேண்டும். தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்பட 416 புராதன கோவில்கள் ஏற்கெனவே மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே இதுபோன்ற நிலை இருந்துவரும் நிலையில், இதை வசதியாக மறைத்தோ அல்லது அறியாமலோ வேண்டுமென்றே மக்களை திசைதிருப்பும் செயல். பேசுவதற்கு வேறு எந்த பிரச்சினைகளும் இல்லாததால் இதுபோன்று பேசுகின்றனர்.
இவ்வாறு எச்.ராஜா பேசினார்.