

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை கோவிட்- 19 வைரஸ் தாக்குதல் தொடர்பாக யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை.
வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்றாலும் 14 நாட்கள் கண்டிப்பாக வீட்டு கண்காணிப்பில் வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு நாடுகளுக்கும் குறிப்பாக சீனா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாடுகளுக்குச் சென்றுவிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த 54 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே இவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தனர்.
ஆனாலும், அரசு உத்தரவுப்படி 14 நாட்கள் அவரவர் வீட்டிலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தினமும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டுக்கு சென்று, அவரது உடல்நிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
கோவிட் - 19 வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கோவிட் - 19 பாதிப்புக்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். முக்கியமாக கிராமப்புறங்களில் சுகாதார பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதன்படி அதிகாரிகள் கிராமங்களில் கோவிட் - 19 குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். கோவிட் - 19 பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும் என முக்கியமான விஷயங்களை மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் நோய் வராமல் தடுக்கலாம்” என்றார் அவர்.