

மதுரையில் வரி கட்டாத 668 கட்டிடங்களில் மாநகாட்சி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பெரிய நிறுவனங்கள் வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் வரி வசூலிக்கப்படாமல் இருந்தது.
ஆனால், தற்போது வழக்கு முடித்து வைக்கப்பட்ட காரணத்தினால் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வரி செலுத்தாத தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்களில் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது வரை 668 கட்டிடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் ரூ.29 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் மற்றும் காலிமனை வரிசெலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் அடிப்படை வளர்ச்சிப் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரி செலுத்துவதற்காக மார்ச் மாதங்கள் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும், ’’ என்றார்.