க.அன்பழகன் மறைவு: கடுமையாக உழைத்த கொள்கைவாதி; கே.எஸ்.அழகிரி புகழாஞ்சலி

க.அன்பழகன் - கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
க.அன்பழகன் - கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
Updated on
1 min read

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடுமையாக உழைத்த கொள்கைவாதி என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 7) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தலைமையை ஏற்று, 70 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கக் கொள்கைகளை தமது உயிரினும் மேலாகக் கருதி, வாழ்நாள் முழுவதும் அதை நிறைவேற்றுவதற்குக் கடுமையாக உழைத்த கொள்கைவாதி க.அன்பழகன் தமது 97-வது வயதில் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.

திமுகவில் 1977 முதல் 43 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்செயலாளராகவும், 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், திமுக அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு, நிதி, கல்வி போன்ற துறைகளை ஏற்று மிகச் சிறப்பாக பணியாற்றிய பெருந்தகையாளர் க.அன்பழகன்.

சிறுவயது முதல் பெரியார், திருவிக போன்றவர்களின் எழுத்துகளாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவர். தமது கருத்து வளம், நாவன்மை மூலம் மிக அற்புதமாக சொற்பொழிவு ஆற்றக்கூடிய பேராற்றல் மிக்கவர் க.அன்பழகன். எவரிடமும் அன்பு காட்டி, இனிமையாகப் பழகக் கூடியவர்.

தமிழக அரசியலில் தலைவர் கருணாநிதியும், பேராசிரியரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். இவர்களிடையே நிலவிய இணக்கமான உறவுகளைப் போல வேறு எந்த இயக்கத்திலும் முன்மாதிரியாக எவரும் இருந்ததில்லை. ஒருவரை ஒருவர் சரியான புரிதலோடு திமுகவை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை இந்த இரு பெரும் தலைவர்களுக்கு உண்டு. சோதனையான காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதை எவரும் மறக்க முடியாது.

திராவிடர் கழகத்தில் இருந்த என் தந்தை மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த காரணத்தால், அதைப்போலவே என்னிடமும் மிகுந்த பாசத்தோடும், பரிவோடும் பழகிய க.அன்பழகனின் இழப்பு என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

திமுகவின் தூண் சாய்ந்துவிட்டது. திமுகவின் சிகரமாக இருந்த க.அன்பழகன் மறைந்துவிட்டார். அவரின் மறைவு என்பது தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திமுகவின் முதுபெரும் தலைவர் க.அன்பழகனின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in