

திமுக தலைவர் கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' நூலில் அன்பழகன் பற்றிக் குறிப்பிடும்போது அவர் என்னைத் தலைவராக ஏற்கத் தயங்கினார் என்று சுவைபட அந்தச் சம்பவத்தை எழுதியுள்ளார். மனதில் பட்டதைப் பேசிய அன்பழகன் என அவரைப் புரிந்துகொண்டு தனது கருத்தைப் பதிவிட்டார் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் இல்லா அறிவாலயம் இல்லை எனலாம். தினந்தோறும் அவர்களை ஒன்றாகத்தான் பார்ப்போம் என கட்சித்தொண்டர்கள் சொல்வார்கள். கருணாநிதியின் இணை பிரியா தோழர், கட்சிக்கும், அவருக்கும் பல இன்னல்கள் வந்த நேரத்திலும், கட்சி அடுக்கடுக்கான தோல்விகளைச் சந்தித்தபோதும் திமுகவை விட்டு அகலாதவர் அன்பழகன்.
திமுகவில் உள்ள முக்கியத் தலைவர்களில் ஒருவரான அன்பழகனுக்கு நெருக்கமான நட்பு என்றால் தனது கல்லூரி கால நண்பரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், தம்பி வா தலைமை ஏற்க வா என அண்ணாவால் அழைக்கப்பட்ட நெடுஞ்செழியன்தான். அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் கட்சியில் பொறுப்பு வகித்தவர், அண்ணா மறைவுக்குப் பின் நெடுஞ்செழியனே அடுத்த முதல்வர் என ஒரு சாரரும், கருணாநிதிதான் முதல்வர் என ஒரு சாரரும் இரு அணிகளாக நின்றனர்.
தன்னை முதல்வராக்காததால் கோபித்துக்கொண்ட நெடுஞ்செழியன் அமைச்சரவையில் பங்குபெற மறுத்துவிட்டார். அந்த நேரத்தில் அன்பழகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நெடுஞ்செழியனைப் பலரும் சமாதானப்படுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் அவர் இல்லாமலேயே அமைச்சரவை பொறுப்பேற்றது.
இந்த நேரத்தில் ஒரு உடன்படிக்கை உண்டானது. கட்சியில் பெரிய பதவி அண்ணா வகித்த பொதுச் செயலாளர் பதவி. தலைவர் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்திருந்தார். அண்ணா மறைவுக்குப் பின் கட்சியின் தலைமையான பொதுச் செயலாளர் பொறுப்பை நெடுஞ்செழியனும், கட்சித் தலைவர் பொறுப்பை கருணாநிதியும் ஏற்பதென்றும், கருணாநிதி முதல்வராகப் பதவி வகிப்பது என்றும் முடிவானது.
அந்த நேரத்தில் அன்பழகன் கருணாநிதியைத் தலைவராக ஏற்கமாட்டேன். தளபதியாக வேண்டுமானால் ஏற்பேன் என கருணாநிதிக்கு நடந்த முதல் பாராட்டுக் கூட்டத்தில் பேசினார். இதை பின்னாளில் தனது 'நெஞ்சுக்கு நீதி' நூலின் இரண்டாம் பாகத்தில் கருணாநிதி குறிப்பிட்டு, ஆரம்பத்தில் என்னை அங்கீகரிக்க மறுத்த பேராசிரியர் பின்னாளில் தலைவராக ஏற்கும் வகையில் உழைத்திருக்கிறேன். ஆனந்தப் பெருமூச்சு விடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 1987-ம் ஆண்டு தனது 'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகத்தின் 8-வது அத்தியாத்தில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
“அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனும் அறிவுக் கடலில் முத்துக் குளித்துத் தேர்ந்தெடுத்த முத்துக்களில் அன்பழகனும் ஒருவர் என்று அண்ணாவால் புகழப்பட்டவர் பேராசிரியர். முதல்வர் பொறுப்பை நான் ஏற்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினர் குழுவின் தலைவராக இருந்த அவர் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேர்தலில் எந்தக் கருத்தும் கூறாமல் சற்று ஒதுங்கியே இருந்தார்.
அண்ணா இறந்த அந்த சோகத்தில் திக்கு தெரியாமல் இந்தக் கழகத்தை வழிநடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி அவரை மவுனமாக்கி விட்டது என்றே கூறலாம். எந்தப் பிரச்சினையிலும், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என கண்டிப்பான கருத்துகளைக் கூறக்கூடியவர், இந்தப் பிரச்சினையில் தலையிடுவதால் புதிய சிக்கல்கள் தோன்றக்கூடும் என்றும் அதனால் ஒதுங்கியிருப்பது ஒன்றே கட்சி எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகப் பொருள் என்று அவரைச் சந்தித்த நண்பர்களிடம் மனம் விட்டுச் சொன்னார்.
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனக்கு நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் நான் சென்று கலந்து கொள்வதற்கு முன்பாகவே கூட்டத்திற்குத் தலைமை வகித்திருந்த பேராசிரியர் உரையாற்றி முடித்துவிட்டார். அன்று அவர் ஆற்றிய உரையை எழுதி வைத்து, கட்சிக்குள் கலகம் விளைவிக்கலாமா? என்று மாற்றார் சிலர் திட்டமிடத் தொடங்கினர்.
பேராசிரியர் நெஞ்சில் பட்டதை சொல்லக்கூடியவரே தவிர பிளவு எனும் நஞ்சைக் கழகத்தில் கலந்திட கனவிலும் நினைக்காதவர். என்னிடம் மிகைப்படச் சொன்னவர்களை அமைதிப்படுத்தினேன். இதனை நான் எழுதும்போது இந்தக் கட்சியில் நான் தலைவர், பேராசிரியர் பொதுச்செயலாளர்.
நாங்கள் இருவரும் பிரியாதவர்கள், பிரிக்கப்பட முடியாதவர்கள். தலைவர் பதவி, ஏற்றுள்ள பொறுப்புகள் சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களே தவிர, எங்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் இருப்பதாக நான் என்றுமே எண்ணியதில்லை. இடுக்கண் கலையும் நட்பின் இலக்கணமாக இதய உணர்வுகளால் ஒன்றிக் கலந்துவிட்ட ஒரு உடன்பிறப்பாக இந்த தமிழனம் காக்க, உற்ற படைக்களனாக விளங்குகின்ற அவருக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்குவது எனக்கு மிகப்பெரும் கடமையாயிற்று.
திமுக தலைவராக தலைமையேற்று வழிநடத்தும் தகுதியை நான் முற்றிலும் பெற்றிருக்கின்றேனா? என்பதுதான் பேராசிரியருக்கு அப்போது ஏற்பட்ட ஐயப்பாடு. அதைத்தான் நேப்பியர் பார்க் பாராட்டுக் கூட்டத்தில் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் பேசியதற்கும், மற்றும்சிலர் எல்லையற்று என்னைப் பாராட்டியதற்கும் பதில் அளிக்கவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த பேராசிரியர் கருணாநிதியைத் தலைவராக அல்ல, தளபதியாக மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று கூறினாலே போதுமானது. தளபதியைத் தளர் பதி ஆக்கிவிடாத அளவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படி நான் அந்தக் கூட்டத்தில் பேசியபோதும் பேராசிரியர் போலவே சிலர் கொண்டிருந்த ஐயப்பாட்டை நீக்குவதற்கும், தோளில் சுமத்தப்பட்ட பொறுப்பைத் தாங்குபவன்தான் என்பதை நிலை நாட்டுவதற்கும் ஓயாத உழைப்பை நல்கிட வேண்டுமென்பதை உணர்ந்திருந்தேன்.
பாச உணர்ச்சியோடுதான் அன்றைக்குப் பேராசிரியர் பேசினார் என்பது பிற்காலத்தில் அவரது நடவடிக்கைகளின் வாயிலாகத் தெளிவாயிற்று. மனத்தூய்மையுடன் இடித்துரைப்பதால் நன்மை விளையும், மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு இனிப்பொழுகப் பேசுவதால் அதனை நம்புவோருக்கு தீமையே விளையும்.
இடித்துரைத்த பேராசிரியர் எனக்கும், கழகத்திற்கும் தாங்கொணாத இடர்கள் வந்தபோது தனது கொள்கை உறுதியையும், நட்பின் ஆழத்தையும் செயல் மூலம் வெளிப்படுத்தினார். இனிப்புரை வழங்கிய சிலரோ பின்னர் இயக்கத்திற்கு இடர் வந்தபோது படர்க்கொடியானார் எதிர் வீட்டுக்கொம்பில்.
பதவியும், பவிசுமே அவர்களை ஆட்கொண்டன. அவற்றைத் துச்சமென கருதி, கால் தூசு எனக் கூறி எனக்குத் தோள்கொடுத்து துணை நிற்கும் பேராசிரியர் அவர் என்னைத் தலைவராக ஏற்றுக் கொள்கிற அளவிற்கு உழைத்திருக்கிறேன் என்பதை திரும்பிப் பார்த்து ஆனந்தப் பெருமூச்சு விடுகிறேன்”.
இவ்வாறு கருணாநிதி கூறியிருந்தார்.
'நெஞ்சுக்கு நீதி' இரண்டாம் பாகத்தை 1987-ம் ஆண்டு வெளியிட்டபோது திமுக தலைவர் கருணாநிதி அன்பழகன் குறித்தும் தனது நட்பின் ஆழத்தையும், அன்பழகனைத் தான் புரிந்துகொண்ட விதத்தையும் தெளிவுபட வெளிப்படுத்தினார்.