

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் அவரது அணுகு முறை, கொள்கை மாறா நட்பு கண்டு வியந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக விடுத்துள்ள இரங்கல்:
“ திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரும் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் போன்ற திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும் நட்பும் கொண்டிருந்தவரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து அரசியலில் பயணித்தவரும், திமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.
தமிழ்ப் பற்றும் தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் அன்பழகன், கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்வைத் தொடங்கி, மக்களாட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்கு பெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவர். பேராசிரியர் அன்பழகன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சராகவும், உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில் அவரது தமிழ்ப் புலமையையும், பெருந்தன்மையான உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்பையும் கண்டு வியந்திருக்கிறோம்.
75 ஆண்டுகள் பொதுவாழ்வில் பங்கு பெற்று அயராது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகனின் மறைவு, தமிழக அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பேராசிரியர் அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை அதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்”.
இவ்வாறு இருவரும் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.