Published : 07 Mar 2020 10:23 AM
Last Updated : 07 Mar 2020 10:23 AM

க.அன்பழகன் மறைவு: தோன்றிய துறைதோறும் புகழ்க் கொடி நாட்டியவர்; திருநாவுக்கரசர் புகழாஞ்சலி

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தோன்றிய துறைதோறும் புகழ்க் கொடி நாட்டியவர் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருநாவுக்கரசர் இன்று (மார்ச் 7) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வயது மற்றும் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியது தமிழினத்திற்கும் தமிழகத்திற்கும் திமுகவுக்கும் பேரிழப்பாகும்.

சுமார் 70 ஆண்டுகால சிறப்பான பொதுவாழ்வு, சட்டப்பேரவை உறுப்பினர், சட்டப்பேரவை மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், 4 முறை அமைச்சர், திமுக தொடங்கிய 1949 முதல் தன் வாழ்நாளின் இறுதி வரை தொண்டராக தொடங்கி பொதுச் செயலாளராக உயர்ந்து தொடர்ந்து அரசியல் பணியாற்றி சாதனை நிகழ்த்தியவர்.

சிறந்த தமிழறிஞர், நல்ல தமிழ்ப் பேச்சாளர், நாடறிந்த எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்ற - சட்டப்பேரவை நிபுணர் என தோன்றிய துறைதோறும் புகழ்க் கொடி நாட்டியவர்.

பெரியாரின் மாணவர், அண்ணாவின் தம்பி, கருணாநிதியின் நண்பர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் என உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் வாழ்பவர். அமைதியும் தியாகமும் உழைப்பும் நேர்மையும் அறிவாற்றலும் பண்பும் கனிவும் துணிவும் நிறைந்தவர் க.அன்பழகன்.

40 ஆண்டுகளுக்கும் மேலான நெருக்கமான பழக்கமும் தொடர்பும், க.அன்பழகனுடன் எனக்குண்டு. அவர் மீது அளவற்ற மரியாதையும் அன்பும் கொண்டவன் நான். என் மீது மிகுந்த பாசம் நிறைந்தவர் க.அன்பழகன்.

முதுபெரும் தலைவராம் அன்பழகனின் மறைவு அரசியல் உலகுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் திமுகவுக்கும், குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். க.அன்பழகனின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் திமுகவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x