Published : 07 Mar 2020 08:57 AM
Last Updated : 07 Mar 2020 08:57 AM

திமுகவைப் பாதுகாத்த பண்புடைச் செம்மல் க.அன்பழகன்: வைகோ இரங்கல்

திமுகவைப் பாதுகாத்த பண்புடைச் செம்மல் க.அன்பழகன் என, அவரது மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நடேசனார், தியாகராயர், டி.ம்.நாயர் அமைத்த திராவிட இயக்கத்தின் கருவறையை, எஃகுக் கோட்டையாக ஆக்கிய அறிவாசான் பெரியார், அண்ணா வழியில், எட்டுத் திக்கிலும் புகழ் பரப்பும் இயக்கமாய் வளர்த்த கருணாநிதிக்குத் தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக் காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.

சின்னஞ்சிறு பருவத்திலேயே, திராவிட இயக்க உணர்வு ஊட்டப் பெற்று, பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் கூர்தீட்டப் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராய் இருந்தபோதே, ஒருசாலை மாணாக்கராகிய நெடுஞ்செழியனுடன் இணைந்து மேடைகளில் பேசிய காலங்களில், திருவாரூரில் தமிழ்நாடு மாணவர் மன்றம் நடத்திய கருணாநிதியின் அழைப்பை ஏற்று, பொதுக்கூட்டத்தில் முழங்கிய பெருமைக்குரியவர் க.அன்பழகன்.

அவரது கூர்த்த மதியை, நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவுத்தேடலை அறிந்து உணர்ந்த அண்ணாவால், பெரிதும் மதிக்கப்பட்டவர். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர். திராவிட இயக்கப் பல்கலைக்கழகத்திற்கும் அவரே பேராசிரியர்.

சொற்பெழிவு ஆற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான். அண்ணா மலேசிய சுற்றுப்பயணம் முடிந்து திரும்புகையில், அவரை வரவேற்று சென்னைக் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பொதுக்கூட்டத்தில், பேராசிரியரின் பேச்சே விஞ்சி நின்றது. நெருக்கடி நிலை காலத்தில், 1975 டிசம்பரில், கோவையில் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டில், அம்மாநாட்டுத் தலைவராக கருணாநிதியை, தமிழரின் தூங்காத இதயமே வருக; தலைமை தாங்கிட வருக என்று அழைத்து அவர் ஆற்றிய உரை, அம்மாநாட்டின் முத்தாய்ப்பான உரை ஆகும்.

எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பின்னர், சென்னை கடற்கரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், க.அன்பழகனின் உரையே சிறப்பாக அமைந்தது.

தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்று, உய்த்து உணர்ந்த பேராசிரியர் நிகழ்த்திய இலக்கிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும், மேடைகளில் வீசிய மெல்லிய பூந்தென்றல் ஆகும்.

அண்ணா சென்னை வரும்போதெல்லாம், வெள்ளாளத் தெருவில் வசித்து வந்த, க.அன்பழகனின் இல்லத்தில்தான் நாள்கணக்கில் தங்கி, மணிக்கணக்காகப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வாராம்.

1965 இல், சென்னை மாநிலக் கல்லூரியில், விக்டோரியா விடுதி தமிழ் மன்றத் தலைவராக நான் பொறுப்பு வகித்தபோது, பேராசிரியரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்து, தமிழ் மன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்து, அவரது ஒப்புதலையும் பெற்றேன். நிகழ்ச்சி அன்றும், பேராசிரியர் இல்லம் சென்று அழைத்து வந்தேன். காரை அவரே ஓட்டினார். நான் பக்கத்தில் அமர்ந்து, விக்டோரியா விடுதிக்குச் சென்றோம்.

'திருக்குறளின் மாண்பு' என்ற தலைப்பில் ஆய்வு உரை நிகழ்த்திய க.அன்பழகன், மீண்டும் இல்லத்திற்குத் திரும்புகின்ற வழியில், என்னுடைய தலைமை உரையை வெகுவாகப் பாராட்டியதை, பெரும்பேறாகக் கருதுகின்றேன்.

கலிங்கப்பட்டிக்கு மூன்று முறை வந்து, என் இல்லத்தில் தங்கி இருக்கின்றார். குற்றாலத்தில் சாரல் தொடங்கியவுடன், ஆண்டுதோறும் அவரை நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வேன். குற்றாலத்தில் நான்கு நாட்கள் அவருடனேயே தங்கி இருந்து, பழத்தோட்ட அருவியில் அவர் நீராடும்போது உடன் இருந்து, மாலையில் மூன்று பொதுக்கூட்டங்கள் பேசியதெல்லாம், நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் ஆகும்.

1984 இல், ராஜபாளையம் திரௌபதி அம்மன் திடலில், நகர திமுக எனக்கு நடத்திய பாராட்டு விழாவில், வாளும் கேடயமும் கொடுத்து, நான் உச்சி குளிர வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார். என் மீது தனிப்பட்ட அன்பும் பாசமும் கொண்டிருந்தார். 1989 ஆம் ஆண்டு, நான் வன்னிக்காடுகளுக்குச் சென்று, இந்தியப் படைத் தாக்குதலில் நூலிழையில் தப்பித்துத் திரும்பியபொழுது, க.அன்பழகன் வீட்டுக்குச் சென்றேன். என்னை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்ததை எந்நாளும் மறக்க முடியாது.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய காலத்திலும், பின்னர் நெடுஞ்செழியன் கருணாநிதியை விட்டுப் பிரிந்த காலத்திலும், பாசமாய்ப் பழகிய நான் வெளியேற்றப்பட்ட காலத்திலும், கருணாநிதியின் கண்ணுக்கு இமையாக, உடலுக்கு உயிராக, உடன் இருந்து, திமுகவைப் பாதுகாத்தவர் க.அன்பழகன் என்பது, கல்வெட்டு ஆன வரலாறு ஆகும்.

கடந்த பிறந்தநாள் அன்று அவரது இல்லம் சென்றபோது, அருகில் அமரவைத்து, அன்பு நெகிழ அவர் பேசியபோது, என் கண்கள் குளமாயின.

திராவிட இயக்கத்தின் வீரமும், தியாகமும், தன்னலம் அற்ற தொண்டும் நிறைந்த புகழ் வரலாற்றில், எந்நாளும் அழிக்க முடியாத தலைவர்களுள் முன்வரிசையில் இடம்பெற்ற க.அன்பழகன், திமுகவின் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலினை ஊக்குவித்து, அவரது தலைமையையும் மதித்து ஏற்றுக்கொண்டு, தன் உயிரினும் மேலான திமுகவைப் பாதுகாத்த, பண்புடைச் செம்மல், 100 வயதைக் கடந்து வாழ்வார் என்று நம்பி இருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த க.அன்பழகனின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், மதிமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்ற முகமாக, இன்று முதல் அடுத்த மூன்று நாள்கள், மதிமுக கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x