க.அன்பழகன் மறைவு: திராவிட சிந்தனையின் தெளிவுரை; கமல்ஹாசன் இரங்கல்

கமல்ஹாசன் - க.அன்பழகன்: கோப்புப்படம்
கமல்ஹாசன் - க.அன்பழகன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் க.அன்பழகன் என, அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது.

இந்நிலையில் நேற்றிரவு அவரை திமுக தலைவர் ஸ்டாலின், கடைசியாக பார்த்துவிட்டுச் சென்றார். அப்போது அவர், அன்பழகனின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லை என்று கவலையுடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், க.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in