Published : 07 Mar 2020 07:27 AM
Last Updated : 07 Mar 2020 07:27 AM

கடலூரில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

கடலூரில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் சொத்து மீட்பு, பாதுகாப்பு குழுவின் கூட்டம்சென்னையில் உள்ள தமிழககாங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் போன்ற தொழில்களை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, டெல்டாபகுதிகளில் எந்தெந்த தொழில்களை நடத்தலாம் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுதான் அறிவித்தது. கடலூர், நாகையில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைந்தால் இரட்டை ரயில் பாதை, புதியசாலைகள் உருவாகும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைவது தமிழகத்தின் பொருளா தார வளர்ச்சிக்கு உதவும் என்பதுஎனது தனிப்பட்ட கருத்து. குஜராத்தைப் போல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்கலாம்.

கடந்த 2006-11 வரை திமுகஆட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினர்களாகினர். எனவே, இந்த முறை காங்கிரஸுக்கு ஒருமாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ளகாங்கிரஸ்காரர்கள் விரும்பினர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அடுத்த முறை காங்கிரஸுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

மக்களவையில் காங்கிரஸ்எம்.பி.க்கள் 7 பேர் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீ்க்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிக் கொண்டிருந்தபோது பாஜக எம்.பி.க்கள் அவரை சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர். காகிதங்களை கிழித்து அவர் மீது வீசினர். ஆனாலும், பாஜகஎம்.பி.க்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக சட்டப்பேரவைபோல நாடாளுமன்றம் மாறிவிட்டது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க அதிமுக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. குடியுரிமைச் சட்டம், என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x