முதல்வர் பழனிசாமியுடன் பாரிவேந்தர் சந்திப்பு: தொகுதிக்கான கோரிக்கை மனுவை அளித்தார்

முதல்வர் பழனிசாமியுடன் பாரிவேந்தர் சந்திப்பு: தொகுதிக்கான கோரிக்கை மனுவை அளித்தார்
Updated on
1 min read

முதல்வர் பழனிசாமியை பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது தொகுதியில் ரயில் பாதை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை பெரம்பலூர் தொகுதி எம்.பி.யும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தொகுதி தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினார். பின்னர், செய்தி யாளர்களிடம் பாரிவேந்தர் கூறியதாவது:

6 முக்கிய கோரிக்கைகள்

முதல்வரிடம் வழங்கிய மனுவில் பெரம்பலூர் தொகுதி மக்களின் 6 கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளேன். முக்கியமாக 50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர்- பெரம்பலூர்- துறையூர் மறறும் நாமக்கல் வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர், ரயில்வே போர்டு தலைவர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளேன். இந்த திட்டத்துக்காக ஏற்கெனவே சர்வே செய்யப்பட்டு கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி வேண்டும் என்றனர். அதற்காகத்தான் முதல் வரை சந்தித்து பேசினேன்.

குளித்தலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீரை நிரப்பினால், பல லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறும். எனவே, ஏரியை தூர்வாரி, தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தேன். அதுபற்றி கவனிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். குளித்தலை -மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், இரூர் பகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும். குளித்தலை, லால் குடியில் 2 கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க வேண்டும். இது தொடர்பாகவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். மத்திய அரசு இவற்றை செய்து தர தயாராக உள்ளது. அதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன். தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in